மாகாணக்கல்வித் திணைக்களம் மட்டக்களப்பில் அமைந்தால், கிழக்கு மாகாணக் கல்வியில் பாரிய மாற்றத்தினையேற்படுத்த முடியும்

மாகாணக்கல்வித் திணைக்களம் மட்டக்களப்பில் அமைந்தால், கிழக்கு மாகாணக் கல்வியில் பாரிய மாற்றத்தினையேற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளாரகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் .

கிழக்கு மாகாண தமிழ்மொழித்தினப் போட்டி  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மாகாணப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மாகாண கல்வித் திணைக்களம் ஆளணிப் பற்றாக்குறையுடன் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. தகைமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் இல்லாத வறுமைநிலையில் இருக்கின்ற கல்வித் திணைக்களமாக காட்சியளிக்கின்றது. இதற்கு காரணம், திணைக்களம் அமைந்துள்ள இடமா? என்ற சந்தேகமும் உள்ளது. மாகாணக்கல்வித் திணைக்களம் மட்டக்களப்பில் அமைந்தால், கிழக்கு மாகாணக் கல்வியில் பாரிய மாற்றத்தினையேற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையுள்ளது. வளப்பற்றாக்குறை, ஆளணிப்பற்றாக்குறை மட்டுமல்ல. பல்வேறு இடர்களை எதிர்கொண்டிருக்கின்றோம். திணைக்களம் அமைந்துள்ள இடத்தினை மாற்றாவிட்டால், கிழக்கு மாகாணசபையில் உள்ள அத்தனை திறமைசாலிகளும், தங்களது மனங்களை மாற்றி திருகோணமலைக்கு வருகைதந்து செயற்பட முன்வருவார்களாயின் மிகச்சிறந்த கல்வி வாழ்க்கையை எங்களுடைய மாணவர்களுக்கு கொடுக்க முடியும்.

தமிழ்மொழி உலகின் முதலாவது மொழியென்கின்றதை, ஆராய்ச்சி ஆதாரங்கள் காட்டிநிற்கின்ற காலகட்டமாக இருந்து கொண்டிருக்கின்றது. தமிழர்கள் இருக்கின்ற போதே தமிழ்மொழி இழந்துகொண்டு செல்கின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி பேசுகின்ற மாணவர்கள் குறைவடைந்து செல்கின்றனர். தமிழ்நாட்டை விட தமிழ்மொழியை காக்கின்றவர்கள் இலங்கையர்கள். தமிழ்மொழி அரசகரும மொழியாக போராடிப்பெற்ற நாடு இலங்கை. ஆனால் இந்தியாவில் தமிழ்மொழி அரசகரும மொழியாகவில்லை. அரச அந்தஸ்தைப்பெற்ற மொழியாகவே இருந்துக் கொண்டிருக்கின்றது. தமிழில் தேசிய கீதம் பாடப்படவேண்டுமென்று வெற்றிகண்டவர்கள் இலங்கைத்தமிழர்கள். தமிழுக்காக போராடுகின்ற அதில் வெற்றிபெறுகின்ற சமுதாயம் இலங்கையில் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறான நாம் தமிழை காப்பதற்காக உழைக்க வேண்டும். தமிழ் மொழி வளரும் மொழியாகவிருந்தால் கவலையடைத் தேவையில்லை. தமிழ்மொழி அழிந்துபோகின்ற மொழியாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதினால், தமிழ்மொழியை பாதுகாக்கும் பொறுப்பை தலைமேல் சுமக்க வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய மாணவர்கள் தமிழ்மொழி உணர்வு குறைந்தவர்களாவே வளர்த்தெடுக்கப்படுகின்றனர். மொழியின் சிந்தனையென்பது, மிகவும் முக்கியமானவிடயமாகும். மொழியின் மீது அன்பும், பாசமும், பற்றும் கொண்டவர்களாகவிருந்தால்தான், அம்மொழியை வளர்ப்பதற்கான உணர்வு ஏற்படும். இப்போது இருக்கின்ற பெரும்பான்மையான மாணவர்கள் மொழியின்பால் பற்றற்றவர்களாக இருக்கின்றனர். இதனால்தான் தமிழ்மொழிப் பாடத்தில் சித்தியடைகின்ற வீதமும் குறைவாக இருந்துகொண்டிருக்கின்றது. என்றார்.