செருப்பைக்காட்டி தகாதவார்த்தைகளால் அவமதிப்பு! சபையில் அமளிதுமளி!

5தமிழ்உறுப்பினர்களும் வெளிநடப்பு:பொத்துவில்பிரதேசசபையில்சம்பவம்!
(காரைதீவு  நிருபர் சகா)


கௌரவமான உயர்சபையொன்றில் செருப்பைக்காட்டி தகாதவார்த்தைகளால்
அவமதித்தமையையடுத்து சபையிலிருந்த தமிழ் உறுப்பினர்கள் ஜவரும்
வெளிநடப்புச்செய்துள்ளனர்.

இச்சம்பவம் பொத்துவில் பிரதேசசபையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 21ஆம் திகதிவியாழக்கிழமை நடைபெற்ற அமையஊழியர் நியமனம் தொடர்பாக நடைபெற்றவிசேடகூட்டமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது..

பொத்துவில் பிரதேசசபையில் மொத்தமாக 21உறுப்பினர்கள் உள்ளனர்.
ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரசும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும்
செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மு.கா உறுப்பினர்
எம்.எஸ்.அப்துல்வாஹிட் தவிசாளராகவும் த.தே.கூ.உறுப்பினர் பெருமாள்
பார்த்தீபன் உப தவிசாளராகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

21உறுப்பினர்களைக்கொண்ட பொத்துவில் பிரதேசசபையில் 5பேர் தமிழ்
உறுப்பினர்களாவர். த.தே.கூட்டமைப்பைச்சேர்ந்த பெருமாள் பார்த்தீபன்
முருகுப்பிள்ளை துரைரெட்ணம் தருமராசா சுபோகரன் அகிலஇலங்கை தமிழ்
காங்கிரஸ்  உறுப்பினர் நடராசா சசிதரன் மற்றும் ஸ்ரீலசு.கட்சி உறுப்பினர்
திருமதி கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணவேணி ஆகிய 5பேருமே தமிழ்உறுப்பினர்களாவர்.

அமையஊழியர்கள் 41பேரை உள்ளீர்ப்பது தொடர்பில் கூட்டப்பட்ட விசேடகூட்டம்
தவிசாளர் அப்துல்வாஸித் தலைமையில் 18உறுப்பினர்களின் சமுகத்துடன் கடந்த21ஆம் திகதி நடைபெற்றது.

சபை நடவடிக்கைகள் சுமார் 45நிமிடங்களாக சுமுகமாக நடந்துகொண்டுபோகும்போது
த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் என்.சசிதரன் எழுந்து பேசினார்.

உறுப்பினர் என்.சசிதரன் பேசுகையில்:
இந்த 41 அமையஊழியர்களை  எந்த அடிப்படையில் நியமனம் வழங்க
உத்தேசித்துள்ளீர்கள்? அமய ஊழியர் நியமனத்தின்போது இனவிகிதாசாரப்படி
தமிழ்மக்களுக்கும் உரிய நியமனங்கள் வழங்கப்படவேண்டும். என்று
வேண்டுகோள்விடுத்தார்.

பதிலுக்கு தவிசாளர் பதிலளிக்கமுற்பட்டபோது அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ்உறுப்பினர் ஏ.எம்.மொகமட் தாஜூதீன் மற்றும் ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர்மீராசாஹிபு அன்வர் சதாத் ஆகியோர் குறுக்கிட்டு உறுப்பினர் சசிதரனுக்கு
எதிராக அவதூறு  பேசி பதலளிக்கமுற்பட்டனர்.

அப்போது உறுப்பினர் சசிதரன் குறுக்கிட்டு ‘எனது கேள்விக்குப்
பதில்சொல்லவேண்டியவர் தவிசாளர். ஆனால் இங்கு பலர்
பதிலளிக்கமுண்டியடிக்கின்றனர். அப்படியானால் தவிசாளர் எத்தனைபேர்? இங்குதவிசாளர் யார்? ‘ என்று கேட்டார்.

அதன்போது உறுப்பினர் அன்வர்சதாத் ‘எருமைமாடுகளே உங்களுக்கென்ன தொழில்
இங்கு? பேயனைப்போல் கதைக்கிறா. உங்களுக்கு செருப்புத்தான்
கிடைக்கும்.என்று பேசி மேலும் பல கீழ்த்தரமான தகாத வார்த்தைகளைப்
பொரிந்துதள்ளினார்.

இடையில் குறுக்கிட்ட உறுப்பினர் தாஜூதீன் ‘டேய் உங்களுக்கு
தொழில்கிடைக்காது. செருப்புத்தான்; கிடைக்கும் ‘ என்றுகூறி காலில் இருந்த
செருப்பைக்கழட்டி சபையில் உறுப்பினர் சசிதரனை நோக்கி நீட்டினார்.

சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. சபை அல்லோலகல்லோலப்பட்டது.
‘கௌரவஉறுப்பினர்களே தயவுசெய்து அமர்ந்து அமைதிகாருங்கள்.’ என்று தவிசாளர்பலதடவைகள் கூறினார். அமைதியை ஏற்படுத்த தவிசாளர் எவ்வளவு முயன்றும்
பலனளிக்கவில்லை. அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று ஆக்ரோசமாக
பேசினர். கைகலப்பு மட்டும் நடைபெறவில்லை.

உடனே உப தவிசாளர் பெ.பார்த்தீபன் எழுந்து ‘
செருப்புக்காட்டப்பட்டதென்பதுஇச்சபையில் தமிழ்உறுப்பினர்களுக்கு
அழைக்கப்பட்ட மிகப்பெரும் அவமரியாதை இது. இதன்பிறகும் இங்கிருப்பதில்
மரியாதையில்லை. தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் எழும்புங்கள் வெளியேறுவோம்
‘ என்று கூறி வெளியேற ஏனைய 4தமிழ் உறுப்பினர்களும் வெளியேறினர்.
அத்துடன் சபை கலைந்தது.

இந்த துர்ப்பாக்கியசம்பவத்தால் சபை ஒரு கணம் திக்குமுக்காடியது. கௌரவமானஉயரிய சபையொன்றில் இவ்வாறு கௌரவ உறுப்பினரொருவரால் இன்னுமொரு கௌரவஉறுப்பினருக்கு செருப்பு காட்டப்பட்டது.
மட்டுமல்லாமல் வேண்டத்தகாத இழிவார்த்தைகளைப் பொரிந்துதள்ளியமை
முழுச்சபைக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. சபைக்கு அபகீர்த்தி
ஏற்படுத்தியது. பொத்துவில் பிரதேசசபை வரலாற்றில் அன்றையநாள்
கறைபடிந்தநாளாக கருதவேண்டியுள்ளது என உபதவிசாளர் பெ.பார்த்தீபன்
கருத்துரைத்தார்.

சம்பவம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையகத்திற்கும் உள்ளுராட்சி அமைச்சருக்கும்கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அம்பாறை உதவி உள்ளுராட்சிஉதவிஆணையருக்கும் அறிவிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.