கிரான்புல் அணைக்கட்டு மீளகட்டப் படாமையால் விவசாயம் பாதிப்பு-ஸ்ரீநேசன் பா.உ

(மயூ.ஆமலை)     அண்மையில்  ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உன்னிச்சை குளத்திலிருந்து திறந்தது விடப்பட்ட நீர் மற்றும் கிரான்புல் அணைக்கட்டு உடைப்பெடுத்தமமையினால் பெருக்கெடுத்த நீர் என்பவற்றால் ஆயிரகணக்கான நெல் வயல்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டது.இதன் பின்னரும் நீர்பாசண திணைக்களத்தின் அசமந்த போக்கினால் விவசாயிகள் தொடர்ந்ததும் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் ,விவசாயிகள் தொடர்ந்தும் தம்மிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

25.06.2018 அன்று மட்டக்களப்பு மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது  விவசாயிகளால் தற்போது  எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் தொடர்பாக விவரிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள்  இடம்பெற்றன.

விவசாயிகள் முறையிட்டதற்கமைய தான் கிரான்புல் அணைக்கட்டுப்  பகுதியிற்கு சென்று , பார்வையிட்டு ,அங்கிருந்தே நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரியை தொடர்புகொண்டு பேசிய போது , அவர் உடைந்த அணைக்கட்டினை உடனே மீள கட்டி வயல்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய போதும் , பல நாட்கள் சென்ற பின்னரும் அவ்வாறு செய்யப்படாமல் உள்ளதாகவும் , இதனால் நெல் வயல்கள் நீரின்றி வாடுவதை தாம் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே  மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முன்னிற்பதாகவும் விவசாயம் பாதிப்படைந்தால் நிலைமை மிகவும் மோசமடையும் எனவும் தெரிவித்து இவ்வாறு பொறுப்பின்றி நடந்தது கொள்ள  வேண்டாம் எனவும் கூறினார்.

எனினும் இதற்கு பதிலளித்த குறித்த பகுதியிற்கு பொறுப்பான  நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரி தாம் அரச நிதி விரயத்தை குறைப்பதற்காக சுமார் இருபது இலட்சம் ரூபா செலவழித்து அணைக்கட்டினை கட்டுவதை தவிர்த்து பத்தாயிரம் ரூபா மட்டும் செலவழித்து மேட்டு வாய்க்காலை புனரமைத்து நீர் வழங்குவதாகவும் தெரிவித்தார்.இதன் போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள், அவ்வாறு அரசாங்கத்துக்கு மிச்சம் பிடித்து கொடுத்து விவசாயிகளின் வாழ்வில் விளையாட வேண்டாம் என குறித்த உத்தியோகத்தரை நோக்கி கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக தாம் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் பொருத்தமான அதிகாரிகளை குறித்த பிரதேசத்துக்கு நியமித்து உடனடியாக விவசாயிகளின் நீர் பாய்ச்சும் பிரச்னைக்கு தீர்வு காணுமாறும், தாம் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருப்பதாகவும் அங்கு சமுகமளித்திருந்த சிரேஸ்ட நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரியிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அறிவுறுத்தினார்.