பிரதியமைச்சர் அமிர்அலிக்கு என்ன உரிமை உள்ளது

 

மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் கலந்துகொள்ள கூடாது என்று சொல்வதற்கு பிரதியமைச்சர் அமீர் அலிக்கு என்ன உரிமை உள்ளது – பிரதேச சபை உறுப்பினர் அன்வர்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மக்களின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கும் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு அழைப்பு விடக்கூடாது என்று சொல்வதற்கு பிரதியமைச்சர் அமீர் அலிக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்று கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதேச செயலகளில் நடைபெறும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென திங்கட்கிழமை (25) கச்சேரியில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினை பிரதி அமைச்சர் அமீர் அலி மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர் மேற்சொன்னவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓர் பிரதேச சபையினை எடுத்துக்கொண்டால் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கான அபிவிருத்திகளை சரியான முறையில் இனங்கண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் உரிய முறையில் திட்டமிட்டு அமுல்படுத்தும் ஓர் சபையாகும். ஓர் பிரதேசத்தின் நிருவாகம் என்பது அந்த பிரதேச சபைக்குரியது என்பதனை அறிந்துகொள்ள முடியாத ஒருவரா இந்த பிரதியமைச்சர்.

தற்போது பிரதேச சபைகளினூடாக கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக வட்டார ரீதியாக தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது அவர்களை உதாசீனம் செய்து, புறந்தள்ளிவிட்டு இவர்களால் மக்களுக்கான அபிவிருத்திகள் சீராகவும், நேர்மையாகவும் சென்றடையக்கூடாது என்று ஓர் சர்வதிகார போக்கினை கொண்டதாக பிரதியமைச்சரின் இத்தீர்மானத்தினை நோக்க முடிகின்றது.

ஒரு பிரதேச சபையினால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவைகள் என்ன, ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் யார் என்பதனை மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதியமைச்சருக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. இவரின் இவ்வாறான செயற்பாடுகளை உற்றுநோக்கும்போது இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியா என்று எண்ணத்தோன்றுகின்றது.

எனது வட்டாரத்தினை பொறுத்தவரையில் நான் வெற்றிபெற்றதிலிருந்து இன்றுவரை தன்னால் இயலுமான மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான உதவிகளை மேற்கொண்டு வருகின்றேன் இவற்றை நான் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவில்லை இதனை எம்மை படைத்த இறைவனும், என்னால் பயன்பெறும் குடும்பங்களும், நிறுவனங்களும் அறிவார்கள்.

மத்தியிலுள்ள சில அமைச்சர்களைப்போன்று கோழிக்குஞ்சு கொடுப்பதனையும், மீன் பெட்டி கொடுப்பதனையும் ஊடகங்களுக்கு காண்பித்து பெருமைக்கும், வாக்குக்கும், தன்னுடைய எதிர்கால இருப்புக்கும் மக்கள் பணியாற்றுபவன் நாங்கள் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்கள் காணப்படுகின்றது. இம்மன்றங்களிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை ஓரந்தள்ளி இம்மக்களுக்கான அபிவிருத்திகள் நடைபெறக்கூடாது என்றதொரு தோற்றப்பாட்டில் ஜனநாயத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ஓர் விடயமாகவே இது காணப்படுகின்றது.

பிரதேச சபை உறுப்பினர்களை அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு அழைத்தால் அவர்களால் இனங்காட்டப்படும் அபிவிருத்திகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் தங்களுக்கு ஏற்படும் என்று அஞ்சித்தான் இவ்வாறான முடிவொன்றினை பிரதியமைச்சர் எடுத்துள்ளார் போலுள்ளது.

அதற்கு மாற்றமாக தனது எதிர்கால அரசியல் இருப்புக்காகவும், வாக்குகளுக்காகவும் தன்னால் நியமிக்கப்பட்ட அரசியல் சார்ந்த அபிவிருத்திக் குழுவினால் கைகாட்டப்படும் பேரம்பேசலில்தான் மக்களின் பணத்தினால் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான அபிவிருத்திகளை நான் மேற்கொள்வேன் என்று நினைத்து செயற்பட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் யார் என்பதனை மக்கள் பிரதிநிதி அறியாமல் செயற்படுவதனை பார்க்கும்போது இவரின் அறிவின் உச்ச கட்டத்தினை இதில் காணக்கூடியதாக உள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் மக்கள் பிரதிநிதிகளை ஓரந்தள்ளி தான் மாத்திரம் அரியாசனம் ஏற வேண்டுமென்று எம்மை படைத்த இறைவனை மறந்து செயற்பட வேண்டாமென பிரதியமைச்சர் அமீர் அலிக்கு இவ்விடயத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு, இவ்வாறான செயற்பாட்டினை அறிந்தும் இதுவரை எமது மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் வாய்மூடி மௌனிகளாக இருப்பதனை விட்டு ஜனநாயகத்திற்கு முரனான வகையில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டிற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டுமெனவும் இத்தருனத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

எஸ்.ஏ. அன்வர் – ஆசிரியர்,
பிரதேச சபை உறுப்பினர்,
கோறளைப்பற்று மேற்கு,
ஓட்டமாவடி.