அமானா வங்கியை அகற்ற வேண்டும்; கல்முனை மாநகரசபையில் எதிரணியால் பிரேரணை சமர்ப்பிப்பு!

(கேதீஸ்)
கல்முனை மாநகரின் மத்தியில் பழைய பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் வங்கியான அமானா வங்கியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை மாநகரசபையின் நேற்றைய (26) அமர்வின்போது பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மாநகரசபையின் எதிர்வரிசை உறுப்பினரான த.தே.கூட்டமைப்பு கட்சியை பரிதிநிதித்துவப்படுத்தும் சிவலிங்கம் அவர்களால் அமானா வங்கியை அகற்றி அவ்விடத்தில் மீண்டும் தனியார் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது, இக்கோரிக்கையை சாய்ந்தமருது சுயேட்சை அணி உறுப்பினர் றஸ்மி வழிமொழிந்தார்.

குறித்த வங்கி கட்டாயம் அகற்றப்பட வேண்டும் என்ற விடயங்களை வலியுறுத்தி பிரேரணையை ஆதரித்து மாநகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் அவர்களும் பல விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தார்.

உறுப்பினர் சிவலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

இ.போ.சபை பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் குறித்த இடத்தில் தனியார் பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பஸ் நிலையம் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டிடம் அமைக்கப்ட்டு வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட்டுவந்தது.

சில மாதங்களின் பின்னர் ஐக்கிய சதுக்கம் என மாநகரசபையால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனியார் பேருந்து நிலையம் அகற்றப்பட்டு தனியார் வங்கியான அமான எனும் வங்கிக்கு அப்போதைய மாநகர முதல்வரின் விருப்பின்பேரில் குறைந்த தொகைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த வங்கி அமைந்துள்ள இடம் நகரின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மத்தியில் அமைந்துள்ளது ஆனால் இதற்கு நியாயபூர்வமான வாடகையும் பெறப்படுவதில்லை அத்தோடு இவ்விடம் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்துகள் கல்முனை பொலிஸ் நிலையதிற்கு முன்பாகவுள்ள ஒருவழிப்பாதையில் தரித்து நிற்கவேண்டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். பிரயாணிகளும் வீதியில் இறக்கிவிடப்படுகின்றனர்.

ஆகவே அமானா வங்கியை அகற்றிவிட்டு குறித்த இடதத்தினை தனியார் பஸ் நிலையமாக பயன்படுத்த மாநகரசபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அமானா வங்கியினை அகற்றக் கோரி மாநகரசபையின் உறுப்பினர் கென்றி மகேந்திரன் உரையாற்றுகையில்….

மக்களுக்கு பாவனைக்கு பெரிதும் பயன்பட்ட கல்முனை தனியார் பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு தனியார் வங்கியான அமானா வங்கியை குறைந்த வருமானத்தில் கடந்தகால மாநகசபை முதல்வரால் அமைக்க அனுமதி வழங்கியது ஏன். இதற்கு அன்றைய உறுப்பினர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? இந்த வங்கியை அகற்றிவிட்டு அவ்விடத்தில் மீண்டும் தனியார் பஸ் நிலையம் மக்கள் பாவனைக்காக அமைக்கப்ட வேண்டும் என  குறிப்பிட்டார்.

அமானா வங்கியை அகற்றப்படவேண்டும் என்ற பிரேரணை உறுப்பினர் சிவலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்டபோது இப்பிரேரணையை ஆதரித்து மேலும் உரையாற்றுகையில்…

கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இவ்விடத்தில் முற்பணமும் பெறாமல் 20000 ரூபாய் வாடகைக்காக இந்த வங்கி அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டமை இந்த மாநகரத்தின் வளம் மழுங்கடிக்கப்படுவதுடன் மக்கள் பயன்படுத்திய பேருந்து நிலையமும் அகற்றப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்குகின்னறனர்.

அமானா வங்கி அமைப்பதற்கு செய்யப்ட்ட ஒப்பந்தம் முன்னாள் முதல்வரால் தனிப்பட்ட விருப்பில் முடிவெடுக்கப்ட்டுள்ளது சபை அங்கிகாரம் பெறப்பட்டதற்கான வெளிப்படைத்தன்மையும் இல்லை இதனை கண்டிக்கின்றோம். ஆகவே இந்த சபையும் முதல்வரும் உடனடியாக இந்த அமானா வங்கியை அகற்றி அங்கு தனியார் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் இந்த வங்கி ஒப்பந்தத்தை றத்து செய்ய வேண்டும் என்றார்.