படுவான்கரையின் மேலும் பல கிராமங்களுக்கு குடிநீர்வசதி 700மில்லியன் ஒதுக்கீடு.ஞா.ஸ்ரீநேசன் எம்.பி தகவல்.

(மயூ.ஆமலை)

படுவான்கரையின் மேலும் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதற்கு நிதி ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

ஆயித்தியமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி  ஆலயத்தின் வருடாந்த உற்சவமும் ஆலயத்தின் வைர விழா நிகழ்வும் நேற்று (25.06.2018) ஆலய வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன.

இந்நிகழ்வின் போது ஆலயத்தின் வரலாறு கூறும் ‘தல விருட்சம்’எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் பிரதம அத்திதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் உரையாற்றும் போது,  இந்த ஆலயங்களின் சிறப்புக்கள் பற்றி கூறியதோடு தாம் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக , தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பது சம்பந்தமாகவும் , பாராளுமன்ற அமர்வுகளுக்கு சென்று அபிவிருத்தி தொடர்பாக பேசுவது மட்டுமல்லாது பல அமைச்சுகளுக்கும் சென்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டு வரக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் ,வேலை வாய்ப்புக்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அமைச்சு உத்தியோகத்தர்களை சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும்  தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்து நீரை,உன்னிச்சை மற்றும்  உன்னிச்சையை அண்டிய கிராமங்களுக்கும் வழங்காமை குறித்து பல தடவைகள் பாரளுமன்றிலும் அமைச்சுகளிலும் சுட்டிக் காட்டியதிற்கிணங்கவும் நீர்  வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளோடு அடிக்கடி தொடர்பு கொண்டும் அவர்களை குறித்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று கிராமங்களின் அவல நிலைகளை பார்வையிட வைத்ததன் மூலமும் , தற்போது உன்னிச்சை ,நெடியமாடு, ஆயித்தியமலை ,மணிபுரம் ,கரடியனாறு போன்ற கிராமங்களுக்கு குடிநீர் வழங்க 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மிக விரைவில் வேலைகள் ஆரம்பமாகும் எனவும் கூறினார்.இன்னும் குடிநீர் வழங்கப் படாமல் இருக்கும் பதுளை வீதியின் கிராமங்களுக்கும் காஞ்சிரங்குடா,பாவக்கொடிச்ச்சேனை மற்றும் பட்டிப்பளை பிரிவின் கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ,எமது மக்களின் வீட்டுத் தேவைக்காக, சீன அரசின் சீமெந்து பொருத்து வீடுகளின் மாதிரிகளை பதுளை நகருக்கு சென்று பார்வையிட்டு அவ்வீடுகள் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்ற போது அவற்றை சிபாரிசு செய்த்ததாகவும், அதற்கான ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறக் கூடிய தொழிற்சாலை ஒன்றினை வவுணதீவில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.ஆனால் இவ்விடயம் தொடர்பாக எந்த சம்பந்தமில்லாத ஒருவர், தானே இந்த தொழிற்சாலையினை கொண்டுவருவதாக அறிக்கை விட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் திண்மக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சுமார் 70-100 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்று தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தான் ஏற்கனவே முன்மொழிந்த கிராமிய பாலங்களில் 44 பாலங்கள் சிபாரிசு செய்யப் பட்டுள்ளதாகவும் நேற்று (25.06.2018 ) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவும் மூலம் இன்னும் 22 கிராமியப் பாலங்களை முன்மொழிந்துள்ளதகவும் ,மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ள திமிலைதீவு – வலையிறவு வீதியினை திறப்பதற்கான முன்மொழிவினை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தீர்மானமாக உரிய அமைச்சுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.