குறைந்து போன குழந்தைப் பிறப்பு வீதம்

 –        படுவான் பாலகன் –

‘இலங்கை நாட்டில் தற்கால சூழலில் சனத்தொகையடிப்படையில் தமிழர்கள் இரண்டாவது இடத்தில் இருந்தாலும்இன்னும் ஒரீரு தசாப்தங்களில் சனத்தொகையிருப்பில் மூன்றாம் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிடுவார்கள் போன்றுதான் தென்படுகின்றது’ என மாவடிமுன்மாரி சந்தியில் நின்று கணேசபிள்ளை சிதம்பரநாதனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். இன்னும் சிலர் புலம்பெயர்ந்துபுலம்பெயர் நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கின்றனர். எதிலிகளாகவும் இன்னும் சிலர்வேறு சில நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில்தமிழர்களது சனத்தொகைவீதம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதனால் இலங்கை நாட்டிலே மூன்றாம் நிலை பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் ஓரிரு தசாப்தங்களில் உருவாகக்கூடும் என்ற ஐயப்பாட்டில் கணேசபிள்ளை பேசிக்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆனாலும் தற்கால சூழலில் தமிழர்களின் பிறப்பு வீதம் வெகுவாக குறைவடைந்து வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில்தான் மாவடிமுன்மாரி பகுதி அமைந்துள்ளது. குறித்த மாவடிமுன்மாரி பகுதியில் ஒரு சிறிய பகுதியாக பனிச்சையடிமுன்மாரி கிராமம் உள்ளது. இங்கு 14விதவைகள் உட்பட101 குடும்பங்களைச் சேர்ந்த 363 நபர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இக்கிராமத்தில் 2012ம் ஆண்டு தொடக்கம் 2018மே மாதம் வரை 38 பிள்ளைகளே பிறந்துள்ளனர். குறிப்பாக 2012ல் நால்வரும், 2013ல் 13பேரும், 2014ல் ஐவரும், 2015ல் இருவரும், 2016ல் ஏழு பேரும், 2017ல் ஆறு பேரும், 2018ல் இதுவரை ஒரு பிள்ளையுமே பிறந்துள்ளனர். கடந்த ஆறு வருடத்திற்குள்ளும் 2013லேதான் அதிகமான பிள்ளைகள் பிறந்துள்ளனர். இத்தரவுகள் பிள்ளைப்பேறின் குறை நிலையையே எடுத்துக்காட்டுகின்றன.

‘ஒரு குடும்பத்தில் ஆறு பேருக்கு மேற்பட்ட அங்கத்தவர்களேஇரு தசாப்த காலங்களுக்கு முன்னர் வாழ்ந்தனர். குறிப்பாக ஒரு குடும்பத்தில் 12 பிள்ளைகள், 10 பிள்ளைகள், 9பிள்ளைகள்ஐந்து பிள்ளைகள், 6 ஆறு பிள்ளைகள் என பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். பிள்ளைகளையே செல்வமென நினைத்தனர். இதனால் குடும்பத்தில் கலகலப்பிருந்தது. கஸ்டங்கள் இருந்தாலும் வாழ்ந்து காட்டினர். வைத்தியசாலை வசதி வாய்ப்புக்களும் மிகக்குறைவுமருத்துவிச்சியே மருத்துவம் செய்தார். சுகப்பிரசவங்களே நடந்தன’ என சிதம்பரப்பிள்ளை தமது பழைய அனுபவங்களைக் கொட்டித்தீர்த்தார்.

அக்காலத்தில் ஏதோ இயற்கையில் கிடைக்கும் பொருட்களையும் உண்டு உயிர்வாழ்ந்துவிடுவர். தொழிலும் இருந்தது. வேறு நாடுகளை நாடவேண்டிய நிலையிருக்கவில்லை. இப்பெல்லாம்,வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் அதிக பணம் வேண்டும். பொருட்களின் விலைவாசியும்நவீன உலகு என்பதனால் அவற்றிற்கு ஈடுகொடுக்க அதிகம் உழைக்க வேண்டும். அவற்றிற்கு ஈடு கொடுப்பதற்கேற்ற ஊதியத்தினைப் பெறுவதற்கான தொழில்துறைகள் இன்மையினால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு,தொழிலுக்காக பெண்களும்ஆண்களும் செல்கின்றனர். அவ்வாறு சென்றால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் தொழில் புரிந்துவிட்டே தம்நாட்டிற்கு திரும்புகின்றனர். தாம் பட்டுச்செல்லும் கடனை அடைப்பதற்கே ஓரிரு வருடங்கள் வேண்டும். அதற்கு பிறகுதான் தமது குடும்பத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால்தான் ஐந்திற்கு மேற்பட்ட வருடங்கள் தொழில் புரிந்ததன் பிற்பாடுதிரும்பிவந்து பின்பு மீண்டும் செல்கின்ற நிலையுள்ளது. இதன் காரணமாகவும் பிள்ளைப்பேறு குறைவடைகின்றது. என்பது கணேசமூர்த்தியின் கருத்தாகின்றது.

அக்கருத்தையும் உண்மையில்லை என்று ஒதுக்க முடியவில்லை. திருமணம் செய்து ஒரு சில நாட்களிலே வெளிநாடு சென்றுவிடுகின்றனர். அவ்வாறு 30வயதில் வெளிநாடு செல்கின்றவர்இருமுறை வெளிநாடு சென்று திரும்பினால், 50வயது கடந்துவிடும். இதற்கு இடையில் திருமணம் செய்து குடும்பத்தோடு இருக்ககூடியது ஒரு சில மாதங்களே.

நவீன வைத்தியத் துறைச் சேவை பரவலாக்கப்படாத சூழலில் சுகப்பிரசவங்கள் நடைபெற்ற நிலையில்வைத்தியத்துறை சேவை பரவலாக்கப்பட்டுவைத்தியசாலைகள் செல்வாக்கு பெற்றுள்ள தற்காலத்தில் அறுவைச் சிகிச்சைகள் மூலம் பல பிள்ளைகள் பெற்றெடுக்கப்படுகின்றனர். இதனாலும் பிள்ளைப்பேறு குறைவடைந்திருக்கின்றது. தற்போதைய தாய்தந்தையர்களிடத்தில் ஒரு ஆண் குழந்தையும்ஒரு பெண் குழந்தையும் போதுமென்ற மனப்பாங்கும் உருவாகியுள்ளது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் தாய்,தந்தையுடன் சேர்த்து மூவர் அல்லது நால்வரே உள்ளமையே இங்கு யதார்த்தம்.

வாழ்க்கைச் சுமையினால் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்கு அச்சமுறுகின்றனர். அரச,அரசார்பற்ற தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதினாலும்,பிள்ளைப்பேறுகளை குறைத்துக் கொள்கின்றனர். இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளை பெறுவது அநாகரீகம் என்ற மனநிலையும் பலரிடம் உருவாகியுள்ளது. அதேவேளை நீண்ட வயது சென்று திருமணம் செய்வதன் விளைவாகவும் பிள்ளைப்பேறு குறைவடைகின்றது. இதனால் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் இலங்கை நாட்டிலே குறைவடைந்து செல்கின்றது. இதனால் சில பாடசாலைகள் மூடப்பட்டும் உள்ளன. இன்னும் சில மூடப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

இரண்டு பிள்ளைகளே போது என்ற அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை தமிழர்கள் முழுமையாக ஏற்று நடப்பது ஒரு புறம் உண்மைதான். அது நாட்டுக்கும் உகந்ததுதான். ஆனால், ஏனைய இனங்கள் சடுதியாக எண்ணிக்கையில் வளர, தமிழர் தேய்ந்து செல்லும் நிலை அவர்களை சனத்தொகையில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளி பின்தங்க வைத்துவிடுமோ என்ற அச்சமும் இங்கு எழாமல் இல்லை. இத்தனைக்கும் போரினாலும் பெரும் சனத்தொகையை இவர்கள் இழந்துபோய் நிற்கிறார்கள்.

 

 இது சரியா, பிழையா என்பது குறித்து குழப்பமான நிலையில் கணேசபிள்ளை ஆதங்கப்படுகிறார்.

 

arangam