களுதாவளையில் சூழல் நேயத்துடனான விவசாய அபிவிருத்தி இலக்குகளை அடைய கைகோர்ப்போம் விழிப்பூட்டல் பேரணி

சூழல் நேயத்துடனான விவசாய அபிவிருத்தி இலக்குகளை அடைய கைகோர்ப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்பூட்டல் எழுச்சிப் பேரணி களுதாவளையில் எதிர்வரும் 28ஆம் திகதி முற்பகல் 08.30 மணிக்கு களுதாவளை பிரதான வீதியில் நடைபெறவுள்ளது என பிரதி விவசாயப் பணிப்பாளர் மு.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிய ஒதுக்கீட்டின் கீழ் விவசாயத் திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் பிரதி விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப் பேரணி விவசாய செயற்பாட்டின் முக்கியத்துவத்தினையும், இயற்கையைப் பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளையும் முதன்மைப்படுத்தவுள்ளது.

அதிகரித்த இரசாயன பாவனையால் ஏற்படும் தாக்கங்களை கருத்திற்கொண்டு சூழல் நேயத்துடனான விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு விவசாயத்திணைக்கள விரிவாக்கல் பிரிவால் பிரதி விவசாயப்பணிப்பாளர் (விரிவாக்கம்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிரந்தர பயிர்ச்சிகிச்சை நிகழ்ச்சித்திட்டத்தின் அனுசரணையுடன் இப் பேரணி நடத்தப்படுகிறது.

இப் பேரணியில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாகாண விவசாயப்பணிப்பாளர், மாவட்ட விவசாயப்பணிப்பாளர்கள், பிரதி விவசாயப்பணிப்பாளர்கள், விவசாயம் சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய வியாபார சேவை நிரந்தரப் பயிர்ச்சிகிச்சை இணைப்பாளர்கள், விவசாய , கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

இரசாயனப்பாவனையைக் குறைத்து சேதன விவசாயத்தினை ஊற்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் விவசாய வியாபார சேவை நிரந்தரப் பயிர்ச்சிகிச்சைப்பிரிவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தினை மேம்படுத்துவதற்காக பண்ணைகளைப் பதிவு நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சுமார் 10 பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.