விவசாயிகள் பாதிப்பு மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரத்தினை திறக்க முயற்சி  

(மயூ.ஆமலை)

மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் , வரத்து நீர் காரணமாக உயர்த்துள்ளமையினால் அறுவடைக்கு தயாராகவுள்ள நெல்  வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.வாவியின் நீர்மட்டத்தை குறைப்பதற்காக வாவி நீர் கடலோடு சங்கமிக்கும் முகத்துவாரத்தை வெட்டி திறந்தது விடுமாறு விவசாயிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்  அவர்கள் கடந்த வாரம் உரிய அதிகாரிகளுடன் முகத்துவார பகுதியினை பார்வையிட்டார்.எனினும் கடலின் நீர் மட்டத்தோடு ஒப்பிடுகையில் வாவியின் நீர் மட்டம் போதியளவு உயர்ந்து காணப்பாடமையினால் முகத்துவாரத்தினை வெட்டுவது சாத்தியப்படவில்லை.

தொடர்ச்சியாக உயர்ந்துவரும் வாவியின் நீர் மட்டத்தினால்’ நெல் வயல்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மீண்டும் விவசாயிகள் முறையிட்டமையினால் ,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் ஆகியோர் விவசாய பிரதிநிதிகளுடன் இன்று காலை குறித்த முகத்துவார பகுதியிற்கு சென்று நிலைமையினை ஆராய்ந்தனர்.இதன் போது மீனவர் சங்க பிரதிநிதிகள் , பிரதேச மீனவர்கள் என்போரும் தமது கருத்துகளை தெரிவித்தனர்.

விவசாயிகளின் இக்கட்டான நிலைமையினை கருத்தில் கொண்டு நாளை நடைபெற இருக்கும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடி முகத்துவாரத்தினை வெட்டி வாவியின் நீர் மட்டத்தினை குறைக்க நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப் பட்டது