இன்று காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்கள்!

சகா)
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமே மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்த கதிர்காமம் நோக்கிச்செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் 38 நாட்களின் பின்னர் இன்று  (24) காரைதீவில் தங்கினர்.

 
நேற்றுமுற்பகல் (23) காரைதீவுக்கு வருகை தந்த பாதயாத்திரைக்குழுவினருக்கு பலத்தவரவேற்பு அளிக்கப்பட்டது.காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில்  வேல்சாமி குழுவினரை வரவேற்றார். 
 
முருகபக்தர் எஸ்.தேவதாஸ் திருவமுது படைத்தார்.அன்றிரவு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தில் தங்கினர். 
 
 ஞாயிற்றுக்கிழமை(24) சித்ததானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் காலையில் இலங்கை வானொலி விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது அனுபவங்களை வெளிப்படுத்தினர். வேல்சாமி உள்ளிட்ட10 அடியார்கள் கருத்துக்ளைப்பகிர்ந்துகொண்டனர்.
 
குழுவினர் ஸ்ரீ நந்தவனசித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் பகல் பொழுதைக்கழித்தனர். வேல்சாமி மகேஸ்வரன் காரைதீவைச்சேர்ந்தவரென்பதும் இவ்வாலயத்தின் முன்னாள் தர்மகர்த்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நேற்று  மாலை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்செல்லும்வழியில் வேல்சாமி தலைமையிலான குழுவினருக்கு மகத்ததான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
திட்டமிட்ட நேரசூசிக்கு இருநாள் முன்னதாக பயணித்து வருவதாக தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தெரிவித்தார்.
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை எதிர்வரும் 4ஆம் திகதி திறப்பதே அதற்கான காரணம். 
 
யூலை 06ஆம் திகதி திறக்கப்படலாமென்ற எதிர்பார்ப்பில் தமது பயண நேரசூசி ஏலவே தயாரிக்கப்பட்டதாகவும் அவை அத்தனை ஆலயங்களுக்கு ஏலவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் வேல்சாமி கூறினார்.
 
ஆனால் தற்போது 4ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படவிருப்பதால் இரண்டு நாள்முன்கூட்டி பயணத்தை சற்று விரைவுபடுத்தியுள்ளதாகக்கூறினார்.