வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அலகையே கிழக்குத்தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும் 

சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவிப்பு

(செ.துஜியந்தன்)
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக குறைந்தபட்சம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள இணைந்து ஒரே அலகாக அமைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய போதிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பெற்ற ஒற்றை மொழிவாரி மாநில சுயாட்சி  அலகையே கிழக்குத்தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும். ஆனால் அத்தகைய தீர்வு எட்டப்படும் வரை வடமாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்தாத கள நிலையைக்களத்திற்கொண்டு கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூக, பொருளாதார பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பொருத்தமான அரசியல் வியூகம்களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் வகுத்து அதனை வினைத்திறனுடன் செயற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
இவ்வாறு கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர் சிரேஸ்டசட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதேச கலந்தரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர்களான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், பூ.உலகநாதன், பேராசிரியர் மா.செல்வராசா உட்பட மட்டக்களப்பு மாவட்ட குழுக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து பேசிய சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன்…..
கிழக்குமாகாணத் தமிழர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்குரிய பொறிமுறை ஒன்றிணை உருவாக்கவேண்டும்.
எதிர்வரும் கிழக்குமாகாணசபைத்தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதிக உச்சபட்ட ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிட வேண்டும் இதனைச் சாத்தியப்படுத்துவதே கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நோக்கமாகும்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சியல்ல இம் மாகாணத்திலுள்ள அனைத்த தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டுவந்து ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிட வைத்து மாகாணத்தில் தமிழர்களின் அரசியல் பலத்தை பேரம்பேசும் சக்தியூடாக அதிகரிப்பதாகும். என்றார்.
கிழக்கு தமிழர் ஒன்றிய மாகாண இணைப்பாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவிக்கையில்…
கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகவுள்ளது. கிழக்கு மாகாணத் தமிழர்களின் எதிர்கால சமூக, அரசியல், பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்காக தமிழர்கள் அனைவரையும்  பிரதேச, பால், வர்க்க மற்றும் கட்சி அரசியல்வேறு பாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைத்தல் அத்துடன் மாகாணத்தில் வாழும் ஏனைய சகோதர இனங்களுடன் நல்லுறவைப் பேணி வளர்த்தலினூடாக இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன நல்லிணக்கத்திற்கும் பங்களிப்பதாகும்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் கிழக்கிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தமிழர்களும் ஒரு பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிடாவிட்டால் எமது இருப்பை பாதுகாத்துக் கொள்ளமுடியாது போய்விடும் என்றார்.