பத்மநாபாவை சுடப்போறார்கள் என 16ம் திகதி முன் கூட்டியே சொன்ன கருணாநிதி

இதுவரை சொல்லவோ எழுதவோ படாத ஈழ வரலாற்று நிழ்வுகளில் ஒன்று!
****************************************

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.

1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.உதவியாளர்களால் வரவேற்கப்பட்டு முதலமைச்சரின் வீட்டு ஹோலில் கிடந்த கதிரைகளில் அமர்த்தப்பட்டோம். எங்களுக்கு சந்திப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரம் இரவு 9.30 மணியாகும்.

பதினொரு மணிவரை சந்திப்புக்கான அழைப்பு வரவில்லை. நான் முப்பது வயது முட்டிளந்தாரி, கனக்க விடயங்களை சீரியஸாக கணக்கில் எடுப்பதில்லை.என்னைக் கேட்காமலே தூக்கம் கண்களை இழுத்து மூடியது.அமர்ந்திருந்த இரட்டைக் கதிரையிலேயே தூங்கிவிட்டேன்.

“டேய், டேய் எழும்புடா மேல வரட்டாம்” என்றவாறு எனது தோளை உலுக்கி எழுப்பினார் பாலா அண்ணன். உடனே சுதாகரித்துக் கொண்டு எழுந்து – தெளிவடைந்து கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன் சரியாக நடு நிசி 12 மணி. மேல் மாடிக்கு ஏறும் பாலாவைப் பின் தொடர்ந்து நடந்தேன்.

மேல் மாடியில் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த சொகுசு ஆசனத்தில் முதல்வர் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அவரின் முன்னால் போடப்பட்டிருந்த குஷன் கதிரைகளில் நாங்கள் இருவரும் உட்கார்ந்தோம்.

அந்தச் சாமத்திலும் மடமடக்கும் புதிய வேஷ்டி,சட்டை, சால்வை உடுத்து கறுப்புக் கண்ணாடி அணிந்து கம்பீரமாக கருணாநிதி வீற்றிருந்தது என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிற்று.இந்த நேரத்திலும் இப்படியா?

ஈழத்துல எல்லாரும் சுகமா இருக்கிறாங்களா? என்ற கரகரத்த குரலின் கேள்வியோடு தொடங்கிய உரையாடல், அரசியல் உட்பட பலதும் பத்துமாகக் கடந்து ஒரு மணி நேரத்தில் நிறைவடைந்தது. நான் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.முதல்வரைச் சந்திக்கும் போதும் விடைபெறும் போதும் புன்னகைப்பதற்காக வாயை விரித்தது மட்டும்தான், வாயைத் திறக்கத்தானுமில்லை.

இடையில் ஒரு தடவை கருணாநிதி கறுப்புக் கண்ணாடியைக் களற்றி கண்களையும் கண்ணாடியையும் துடைத்துவிட்டு மீண்டும் அணிந்து கொண்டார். அவ்வேளை அவரின் முகத்தை உற்றுப் பார்த்த போதுதான் தெரிந்து அவரது ஒரு கண் மற்றையதை விடவும் கொஞ்சம் சிறியது. ஓஹோ இதுதானா இவர் கறுப்புக்கண்ணாடி அணிவதன் மர்மம் என்றும் எண்ணிக் கொண்டேன்.

இந்தச் சந்திப்பின் போது கருணாநிதி கீழ்க்கண்டவாறு எங்களிடம் கூறினார்.

” பத்மநாபாவைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீங்கள் போய் அவரைச் சந்தித்து சென்னையில் இருக்கும் ஈ.பீ.ஆர். எல் எப் காரியாலயத்தை தற்காலிகமாக மூடிவிட்டு, அவரையும் அவரது உறுப்பினர்களையும் வேறு ஒரு மாநிலத்துக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு பின்னர் தமிழ் நாட்டுக்கு வருமாறு நான் அறிவுறுத்துவதாக நாபாவிடம் கூறுங்கள்” என்று மிகவும் இரகசியமாக எம்மிடம் கூறப்பட்டது. வழமையாக சந்திப்புகளின் போது குறிப்பெடுப்பதற்கு முதல்வரின் ஆசனத்துக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் அவரது செயலர் அன்றைய எமது சந்திப்பில் உடனிருக்கவில்லை.

அப்போதுதான் முதல்வருடன் அவசரமான சந்திப்பு ஒன்றுக்காக கொழும்பில் இருந்து ஏன் நாங்கள் அழைக்கப்பட்டோம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

சந்திப்பு முடிந்தவுடன் பாலா, பத்மநாபாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்.உடனே வாங்கோ அண்ணே என்று அழத்தார் நாபா. அவரும் சில தோழர்களும் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டல் ‘சோலார்’ அல்லது ‘பிறசிடென்ட்’ ஆக இருக்கவேண்டும்,சரியாக நினைவில்லை.

அப்போது காலம் 17 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியாகியிருந்தது. உடனடியாகச் சென்று பாலாவும்,நானும் ஹோட்டலில் நாபாவையும், அவரது தோழர்களையும் சந்தித்து கருணாநிதியின் அறிவுறுத்தலைத் தெரிவித்தோம். நட்புடன் சிறிது நேரம் உரையாடினோம்.

கருணாநிதியின் அறிவுறுத்தலை நாபா கணக்கில் எடுத்தாரா? சிறிது காலம் தமிழ்நாட்டை விட்டு வெளியில் தங்கியிருக்கும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தாரா? அல்லது கொலை செய்தவர்களுக்கு, நாபாவும் தோழர்களும் இடம் மாறியிருக்க முயற்சிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து முந்திக் கொண்டார்களா? என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

18 ஆம் திகதி பாலாவும் நானும் கொழும்பு திரும்பிவிட்டோம். 19 ஆம் திகதி நாபாவும் தோழர்கள் சிலரும் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது.

Basheer Segu Dawood