அம்மாவின் கண்ணுக்குப் பின் என் நிலை என்னவாகுமோ முன்னாள் போராளி.மின்சாரவசதியினை செய்து கொடுக்க முன்வந்த பிரதேசசபை உறுப்பினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை கரவெட்டி கிராமத்தில் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ள முன்னால் போராளியை வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்கியுள்ளார்.

உன்னிச்சை கரவெட்டி கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கின்ற வடிவேல் தில்லையம்பலம் (வயது 48) என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.

போராளியான திலீபன் நிலையை அறிந்த வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமநேசன் நேரில் சென்று பார்வையிட்டு நிலை தொடர்பாக விசாரித்ததுடன், மருத்துவ செலவுகளுக்கு சிறு தொகைப் பணத்தினை வழங்கி வைத்துள்ளார்.

அத்தோடு தன்னால் இயன்ற உதவிகளை எதிர்வரும் காலங்களில் வழங்குவதாகவும், முதலில் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போராளியின் தாயிடம் வாக்குறுதியளித்தார்.

மாவீரர் குடும்பம் முன்னாள் போராளி என்பதற்கும் அப்பால் மனிதாபிமானத்தை நேசிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் இப்போராளியின் நிலைகண்டு தடுமாறி நிற்கின்றனர்.

இவரை வைத்தியசாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுக்கையாக உள்ளார். இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்.

இவரது அக்காவான விஜித்தா என்பவரின் பெயரிலேயே கரவெட்டியாறு விஜித்தா தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்துள்ளது. குறித்த பாடசாலையும் ஆசிரியர் பற்றாக்குறையால் தற்போது இயங்காது உள்ளது.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வைத்திய உதவிகள் இன்றி படுக்கையாக இருக்கும் திலீபனை காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வளிக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு அவரது தாய் அழைப்பு விடுக்கின்றார்.

வயதான அம்மா, வயதான தந்தை என்ன செய்வார்கள். ஆனாலும் தாய் பாதுகாத்து வருகிறார். அம்மாவின் கண்ணுக்குப் பின் என் நிலை என்ன என்று நினைக்கும் போது தான் பயமாக இருக்கிறது என கண்ணீர் சிந்தியவாறு போராளியான திலீபன் தெரிவித்தார்.

தனக்கு வெக்கையாக இருக்கிறது தாங்க முடியாது இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குளிப்பதற்கு ஆசை ஆனால் அம்மாவால் ஒரே தூக்கி குளிக்க வைக்க முடியாது, வீட்டிற்கு வெளிச்சமில்லை, இருண்ட யுகத்திற்குள் வாழ்ந்து வருகின்றேன் என பல்வேறு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.