தலைக்கவசத்துடன்வந்தநபர் மின்னல்வேகத்தில்5பவுண்தங்கச்சங்கிலி அறுப்பு!

காரைதீவில்சம்பவம்: பொலிசார் விசாரணை:  சந்தேகநபர் தலைமறைவு!
(காரைதீவு  நிருபர் சகா)
 
தலைக்கவசத்துடன் வந்த நபர் கடையின் உரிமையாளர் அணிந்திருந்த 5பவுண் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்து மின்னல்வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.
 
அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றதாகத்தெரிகிறது.
 
இச்சம்பவம் நேற்றுமுன்தினம்(13) இரவு 8.45மணியளவில் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
 
காரைதீவு 1 விபுலாந்ந்த வீதியிலுள்ள விசுவலிங்கம் கோடீஸ்வரன்(வயது53) என்பவரின் பலசரக்குக்கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சம்மாந்துறைப்பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இப்னுஅசார் தலைமையிலான பொலிஸ் குழுவினர்  உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தடயங்களை அவதானித்து விசாரணைகளை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது. 
 
மறுநாள் அம்பாறையிலிருந்து விசேட துப்பறியும் சோக்கோ பொலிசாரும் வந்து தடயங்களைப்பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
 
பலனாக சந்தேகநபர் ஒருவரை உரிமையாளர் கோடீஸ்வரன் இனங்காட்டியுள்ளார். அவரைத்தேடிச் சென்றதும் அவர் தலைமறைவாகியுள்ளார். 
 
பொலிசார்அவரைக்கண்டுபிடிப்பதற்காக வலைவிரித்துள்ளனர். பிரஸ்தாப நபர் ஏலவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையிலிருந்துவந்தவர் எனக்கூறப்படுகின்றது.
 
சம்பவம் பற்றி கடைஉரிமையானர் வி.கோடீஸ்வரன் (53) கூறுகையில்:
 
அன்று இரவு 8.45மணியிருக்கும். நானும் உனது உதவியாளரும் கடையில் நின்றிருந்தோம். மோட்டார்சைக்கிளில் இருவர் வந்தனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தனர்.
ஒருவர் வீதியில் இயங்குநிலையில் மோட்டார்சைக்கிளில் நின்றார். மற்றவர் தலைக்கவசத்துடனேயே என்னிடம் 3 பிறிஸ்டல் கேட்டார். நான் பணத்தைப்பெற்றுக்கொண்டு கொடுத்தேன்.அதை வைக்க வெற்றுப்பெட்டியொன்று கேட்டார்.
 
பெட்டியை எடுப்பதற்காக திரும்பியவேளை மின்னல்வேகத்தில் பாய்ந்து எனது கழுத்திலிருந்த மாலையை அறுத்துக்கொண்டு ஓடினார். நான் பின்னால் ஓடிப்போவதற்கிடையில் மோட்டார்சைக்கிளில் தயாராகவிருந்த நபர் இவரை ஏற்றிக்கொண்டு விர் என்று பறந்தார்.
 
எனது உதவியாளர் அவர்களை சிறிதுதூரம் துரத்திச்சென்றார். முடியவில்லை. அவர்கள் நேராக மாளிகைக்காட்டுப்பக்கம் ஓடித்தப்பினர்.
 
ஆனால் அவர்கள் லைற் போடவில்லை.பின் நம்பர் பிளேட்டை மறைத்து வெள்ளைத்தாள் ஒட்டியிருந்தார்கள். 
நான் மறுகணம் சம்மாந்துறை சென்று பொலிசாரிடம் முறையிட்டேன். என்றார்.
 
அப்பகுதிகளிலுள்ள சிசிரிவி கமராக்களில் சிக்காத  வகையிலே அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.