மஸ்த்தான் பாடிய பாடல்.“ஆதியந்தங்கடந்தவுமையாளருள் நாதாந்தச் சோதியந்தங்கடந்தெழுஞ்சுடரே நந்தீஸ்வரனே!

Basheer Segu Dawood


பிரதியமைச்சர் காதர் மஸ்த்தான், எழுந்து வந்த இந்துத்துவா எதிர்ப்பலையைக் கண்டு அஞ்சி ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்து மத விவகாரப் பிரதியமைச்சர் பொறுப்பை ஜனாதிபதி மஸ்த்தானிடமிருந்து மீளப்பெற்றுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இன்று அரசியல் அரங்கத்தில் சலங்கை கட்டி ஆடும் மதவாதத்தை (மதவாதங்களை) ஜனாதிபதியும் மஸ்த்தானும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத்தைத் தருகிறது.

இந்த மஸ்த்தான் என்ன 1800 களின் ஆரம்பத்தில் ஆசிரம வாழ்வு வாழ்ந்து மறைந்த தமிழ் பேசிய முஸ்லிம் ஞானி குணங்குடி மஸ்த்தான் சாஹிபு அவர்களே இன்று எழுந்தருளி வந்து இந்து மத விவகாரப் பிரதியமைச்சைப் பொறுப்பெடுத்தாலும் இலங்கையில் எதிர்ப்பலை சுனாமியாகத்தான் சுவாமியாடும் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

“ஆதியந்தங்கடந்தவுமையாளருள்நாதாந்தச் சோதியந்தங்கடந்தெழுஞ்சுடரே நந்தீஸ்வரனே!

முடியடியாய் நின்றநடு மூலவிளக்கே அடிமுடியாய் நின்றநடு அணையே நந்தீஸ்வரனே!!” என்று பாடியவர் குணங்குடி மஸ்த்தான் என்பதைக் கருத்தில் கொள்க.மேலும், இன்றைய இந்து மத விவகார முழு அமைச்சர் சுவாமி நாதன் ஐயாவால் மேற்சொன்னவாறான ஒரு பாடலையாவது இயற்ற முடியுமா என்பதை எண்ணிப்பார்க்கவும் வேண்டும்.

“ஓடியலைந்துமிவ் வைய முற்றுமுழன்றுந்தேடியெடுத்த திரவியம் யாவையுஞ் செத்தபின்பு நாடியெடுப்பதுமுண்டோ மறக்குநெஞ்சே வாடியிரந்தறஞ்செய்வாய் குணங்குடி வாய்த்திடுமே!”

இந்து மதம் பற்றிய பூரண விளக்கம் தெரியாதவராயினும் இந்து மதத்தைச் சேர்ந்தவரே அந்த மத விவகார அமைச்சராக இருக்கவேண்டும் என்ற இந்து மக்களின் விருப்பம் தவறானதல்ல ஆனால் காதர் மஸ்தானை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடியதும் மத வெறுப்பை உமிழ்ந்ததும் தவறானதாகும்.

அரசுடனும் ஜனாதிபதியுடனும் நல்லுறவுடன் இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் காதுகளுக்குள் இந்த விவகாரத்தைப் போட்டிருந்தால் காதும் காதும் வைத்தாற் போல் விவகாரத்தை முடித்திருக்கலாம்.

ஆனால் நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் தோரணையில் செயல்பட்டமை இந்து முஸ்லிம் உறவை மேலும் சிக்கலுக்குள்ளாக்க விரும்பும் சக்திகளின் சதி என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான பல பத்தாண்டு கால முரண்பாடுகளில் முதன்மையான முரணாக மத வேறுபாடோ, மத விவகாரமோ முன்னொரு போதும் இருந்ததில்லை.

முரண்பாடுகள்- வளப்பங்கீடு, தனித்தேசிய அரசியலில் பங்கு, அதிகார அலகுக் கோரிக்கை, காணிப்பிரச்சினை,வணிகப் போட்டி, மற்றும் விளை நிலத் தகராறு என்பனவற்றை ஒத்த முரண்களே அதிகமும் காணப்பட்டன.

ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தகாலம் முடிவதற்கு முன்பாக, விசேடமாக மேற்குலக ஆதரவு பெற்ற புதிய தாராளவாதக் கொள்கையுடைய நல்லாட்சி அரசின் தோற்றத்தின் பின்னரான காலத்தில்தான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் மதங்கள் சார்பான முரண்பாடுகள் முதன்மை பெறத் தொடங்கியுள்ளன.

இது விடயத்தில், மானுட அழிவு பற்றிக் கவலை கொள்ளாமல் சொந்த நலன் காக்க விளையும் அக்கறையுள்ள சக்திகள், சிறு சிறு அசம்பாவிதங்களை பூதாகாரமாக்கியும்- புதிய சம்பவங்களைத் தோற்றுவித்தும் வெறுப்பைப் பரப்பவும்,கலவரங்களைத் தூண்டவும் முயல்கின்றனவா என்று சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை.

2015 இன் ஜனாதிபதித் தேர்தலில் தமது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சில சக்திகள்
பொது பலசேன அல்லது இதையொத்த அமைப்புகளைப் பயன்படுத்தின. ஆனால் இதே பௌத்த தீவிரவாத அமைப்புகளைக் கொண்டு 2019 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் தமது நோக்கத்தை நிறைவேற்ற முடியாத புதிய நிலைவரம் தோன்றியுள்ளதை மேற்சொன்ன சக்திகள் புரிந்து கொள்கின்றன.எனவேதான் புதிய உத்தியாக இந்து இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுவோருக்கிடையில் மோதலுக்குத் தூபமிடப்படுகிறதா என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் கஸ்ஸாப் அண்மையில் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த வேளையில் கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டாம். அவரைத் தங்களது நாடும், மேற்குலகும் விரும்பவில்லை என்றும், கோட்டா எமது நாட்டின் பிரசையாகவும் இருப்பதால் அவரின் குடியுரிமையை இரத்துச் செய்வதில் சிக்கல்கள் உள்ளன என்றும் மஹிந்தவிடம் தெரிவித்ததாக சூடான செய்திகள் தற்போது வெளிவந்துள்ளன.

இது உண்மையானால்,கோட்டாவோ அல்லது வேறொருவரோ, மஹிந்த விரல் சுட்டிக் காட்டுபவரே அடுத்த ஜனாதிபதியாக வருவார் என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது என்பதைத்தானே இந்தச் செய்தி உறுதிப்படுத்துகிறது.

இந்து முஸ்லிம் முரண்பாட்டின் ஊடாக உருவாகும் அரசியல் வெளி அதனை உருவாக்கியவர்களின் பின்புறத்தில் பிடித்த தீயாகவே மாறும் என்பதைத் திட்டவட்டமாகக் கூறுவேன்.

இந்த நிலைவரம் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டு அடித்து வீங்க வைக்கப்படுமானால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் அதிகமான வாக்குகள் மஹிந்த சார்பாகவே வழங்கப்படும் சாத்தியம் உருவாகும். சிங்கள் பௌத்தர்களின் அதிக ஆதரவைப் பெற்ற சிங்கள பௌத்த தலைவரிடம் அடைக்கலம் தேடுவதில்தான் தங்களது பாதுகாப்பு ஒப்பீட்டளவில் ஓரளவாவது உத்தரவாதப்படுத்தப்படும் என்று முஸ்லிம்கள் நம்புவர்.

இதேவேளை,இலங்கைத் தமிழர்கள் தங்களது போராட்டத்தை நசுக்கி தங்களது மக்களை கொடூரமாக அழிப்பதற்கு காரணமாக இருந்த மஹிந்த மீண்டும் அதிகாரம் பெறுவதை விரும்பமாட்டார்கள். வடகிழக்குத் தமிழர் அரசியலில், ஏக தலைமை எனும் பாசிசப் போக்கு மறையத் தொடங்கியுள்ளது.
ஆகவே,அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அம்மக்கள் கடந்த காலங்களைப் போல் ஏகோபித்த ஒரே முடிவுக்கு வருவது கடினமாக இருக்கக்கூடும்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் தமக்குத் தந்த வாக்குறுதியை நல்லாட்சி நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்ற கடுங் கோபத்தில் இருக்கிறது தமிழினம்.இக்கோபத்துக்கு மைத்திரியும், ரணிலுமே பிரதானமாக இலக்காகுவர். மேலும், புதிய தமிழர் பரம்பரை பெரும்பாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது இருக்கக் கூடும்.

எனவே,எதிர்பாராத வகையில் எதிர் தரப்புக்கு வாய்ப்பாக தனது கம்பங்களுக்குள் பந்துகளை அடித்ததற்கு ஒப்பான செயலாகவே இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டுபவர்களின் கதியை அமைக்கக் காத்திருக்கிறது காலம்.