கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இந்து விவகார பிரதி அமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை (14) கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக விடுதி பகுதியிலிருந்து பதாதைகளுடன் பிரதான வீதிக்கு வந்த இம்மாணவர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்து சமய விவகார பிரதியமைச்சராக இஸ்லாமியர் நியமிக்க்பட்டுள்ளதால் தமிழ் – முஸ்லிம் இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும். இந்து சமய ஆகம நெறிகள் தொடர்பாக பிரதியமைச்சர் அறிந்திருக்க மாட்டார். எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக கவனம் செலுத்தி தமிழர் ஒருவரை பிரதியமைச்சராக நியமிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்க்ள வலியுறுத்தினர்.

இந்துக்கள் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்வது பிடிக்கவில்லையா, இந்துக்களை ஒடுக்காதே இதன் பின்னணி என்ன,? இந்து சமயத்தின் உணர்வில் கைவைக்காதே, எதிர்க் கட்சித் தலைவர் எங்கே ஆழ்ந்த உறக்கத்திலா, நல்லாட்சி என்பது இவ்வாட்சிதானா, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே சுயநலவாதிகளாகச் செயற்படாதீர்கள், இந்து அமைப்புக்களே ஒன்று திரழ்வீர் விழித்தெழுவீர், மதங்களை வதைக்காதே, ஆதி மதத்திற்கே அவமானம், மைத்திரி அரசே சமயம் என்பது உணர்வுபூர்வமானது என்று தெரியாதா, மைத்திரி அரசே இதுதானா நீர் கூறும் நல்லாட்சி அரசு போன்ற வாசகங்கள் எழுத்தபட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.