கிரான்புல்சேனை மண் அணைக்கட்டினை தற்காலிகமாக புனரமைப்பது தொடர்பாக ஆராய்வு

வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரான்புல்சேனை மண் அணைக்கட்டினை தற்காலிகமாக புனரமைப்பது தொடர்பில் கள ஆய்வினை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் (14) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

வெள்ளம் காரணமாக கடந்த மாதம் 24ம் திகதி உடைப்பெடுத்த இக் கிரான்புல்சேனை மண் அணையை மீண்டும் அமைத்துத் தருமாறு அப்பிரதேச விவசாய அமைப்புகள் பல தடவைகள் உரிய திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தும் அவ்விடயம் இடம்பெறாதவிடத்து கடந்த 11ம் திகதி இடம்பெற்ற செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் கொண்டு வரப்பட்டு இவ்வணையை மீண்டும் புனரமைப்பது தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை இப்பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரையில் இவ்வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதால் பிரசே விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் விவசாய அமைச்சருக்கு இவ்விடயத்தினைத் தெரியப்படுத்தியதற்கமைவாக அவர்கள் இன்றைய தினம் இவ்விஜயத்தினை மேற்கொண்டனர்.

இதன் போது அங்கு சென்று நிலவரங்களை ஆராய்ந்த அவர்கள் விவசாயிகளுடனும் கலந்துரையாடினர். இதன் போது இன்னும் 03 நாட்களுக்குள் இவ்வணை கட்டுப்படாது விட்டால் இப்பிரதேசத்தின் சுமார் 5000 ஏக்கர் வரையிலான வயல் நிலங்கள் நீர் இல்லாமல் அழியும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் உரிய நீர்ப்பாசனப் பெறியியலாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு மேற்கொள்ளப்பட்ட காரசாரமான உரையாடலை அடுத்து பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இப் புனர்நிர்மான வேலையை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் இன்றைய தினமே மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரான்புல்சேனை அணைக்கட்டு விடயத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்மறையான செயற்பாடுகளையே மேற்கொள்வதாக இதன் போது விவசாயிகளால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.