நுண்கடன் பெறுவதை குறைக்க பெண்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நுண்கடன் பெறுவதை குறைப்பதானால் குடும்பப் பெண்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும் என வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சித்தி வேக் கவுஸ் ஏற்பாட்டில் வாழைச்சேனை பயிலுனர்களால் வடிவமைக்கப்பட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில்; நடைபெற்ற கேக் வகைகளுக்கான கண்காட்சியை புதன்கிழமை மாலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எமது பகுதியில் நுண்கடனால் பல்வேறு உயிர் இழப்புக்கள், குடும்ப தகராறுகள் இடம்பெற்று வருகின்றது. எனவே எமது பெண்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டால் கடன் பெற வேண்டிய தேவைப்பாடு கிடையாது. முறையான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை முன்னேற்றும் வகையில் பிரதேச சபை எப்போதும் உதவுவதற்கு தயாராக உள்ளது.

எமது பிரதேசத்தில் உணவு தயாரிக்கும் சுயதொழில் முயற்சிகளின் ஈடுபடுபவர்கள் அதனை தாமே விற்பனை செய்து வருமானத்தை ஈட்டும் வகையில் செயற்பட வேண்டும்.

தாம் தயாரிக்கும் உணவு உற்பத்திகளை இன்னொரு தரகர் மூலம் அதனை விற்பனை செய்யாமல் தாமாகவே சிறிய வியாபார நிலையம் அமைத்து விற்பனை செய்தால் எமது மக்கள் பெரும் குடும்ப கஸ்டத்தின் பிடியில் இருக்க வேண்டிய தேவைப்பாடு கிடையாது.

எமது பிரதேசத்தில் இவ்வாறான உணவு தயாரிக்கும் சுயதொழில் முயற்சிகள் முறையாக இடம்பெறுவதில்லை. அவ்வாறு நடைபெற்றாலும் ஓர் இரு வாரங்கள் மட்டுமே களை கட்டும் பின்பு வியாபாரத்தைக் கைவிடும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு முறையான, சுவையான, சுத்தமான, சுகாதாரமான, தரமான விலைக்கேற்றவான மக்களைக் கவரத்தக்கவான தன்மைகளில் அப்பண்டங்கள் இன்மையினாலேயே வியாபார நிலையங்கள் இடை நடுவில் மூடப்படுகின்றன.

உண்மையில் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல் நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த கேக் உற்பத்தியாளர்கள் இருக்க வேண்டும். உண்மையில் திருமண, பிறந்தநாள் நிகழ்வுகளுக்கான இந்த கேக் வகைகளின் உற்பத்தியும் வினியோகமும் கோறளைப்பற்றுப் பிரதேசத்தில் நல்ல விற்பனைக்கான கேள்வியுள்ள நிலையில் இக்கண்காட்சி அமைந்தமை சிறப்பம்சமாகும் என்றார்.