காதர் மஸ்தான்விவகாரம் தமிழ்த்தலைவர்கள் கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

வை எல் எஸ் ஹமீட் –
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியே நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு இராஜாங்க அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் ஒரு பிரதான வேறுபாடு இருக்கின்றது. அதாவது இராஜங்க அமைச்சருக்கு ஐனாதிபதி ஏதாவது விடயதானங்களை நேரடியாக வழங்கலாம்.  ஆனால் பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்கமுடியாது.
இருவகை அமைச்சர்களுக்கும் கபினட் அமைச்சர் பொறுப்புக்களை வர்த்தமானி மூலம் வழங்கலாம். இதன்மூலம் புரிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால் ராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி நேரடியாக சில பொறுப்புக்களை வழங்கலாம். பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்க முடியாது. உரிய கபினட் அமைச்சர் விரும்பினால் மாத்திரம் அவர நேரடியாக அவ்வாறு வழங்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு ஒரு அமைச்சரும் வர்த்தமானி மூலம் பொறுப்புக்களை வழங்குவதில்லை.
மட்டுமல்லாமல் “ பிரதியமைச்சர்கள் உரிய அமைச்சர்களுக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுகிறார்கள்”; என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. ஆனால் இராஜாங்க அமைச்சருடைய நியமனத்தில் அவ்வாறான வாசகம் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. எனவே, இதன் சுருக்கம் பிரதியமைச்சர்களுக்கு என்று எந்த அதிகாரமும் கிடையாது. உரிய அமைச்சர்கள் அவர்களாக வழங்கினாலேயொழிய.
பதில் அமைச்சர் நியமனம்
———————————-
உரிய கபினட் அமைச்சர் தம் பணியைச் செய்யமுடியதவிடத்து ( உதாரணமாக வெளிநாடு சென்றால்) ஜனாதிபதி இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை பதில் அமைச்சராக நியமிக்கலாம்; என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கின்றதேதவிர பிரதியமைச்சரை நியமிக்கவேண்டும்; என்று சொல்லவில்லை. ( அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் இன்னுமொரு கபினட் அமைச்சராக இருக்கலாம், உரிய பிரதியமைச்சராக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம்; அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும்; அவ்வளவுதான் – நடைமுறையில் உரிய இராஜாங்க அமைச்சரோ, பிரதியமைச்சரோ நியமிக்கப்படுவது வேறுவிடயம். அதற்காக எப்பொழுதும் அவ்வாறு நடைபெறுவதுமில்லை).
காதர் மஸ்தான் ஏன் இந்துமதவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்?
—————————————————
பிரதியமைச்சர் ஒருவர் ஜனாதிபதியினால் எதுவித அதிகாரமும் வழங்கப்படாமல் உரிய அமைச்சருக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுவதால் உரிய அமைச்சரின் பதவிப்பெயர்  எவ்வாறு அமைகின்றதோ, அவ்வாறே உரிய பிரதி அமைச்சரின் பதவிப்பெயரும் வழமையாக அமைகின்றது. அந்தவகையில்தான் உரிய அமைச்சரின் பதவிப்பெயரில் இந்துமதவிவகாரம் இருப்பதால் பிரதியமைச்சரின் பதவிப்பெயரிலும் அது வந்திருக்கின்றது. இதேபோன்றுதான் பிரதியமைச்சர் துலிப் விஜேசேகரவின் பதவிப்பெயரும் “ தபால், தபால் சேவைகள் , முஸ்லிம் மதவிவகார பிரதியமைச்சர்” என வந்திருக்கின்றது.
பிரதியமைச்சர் துலிப் விஜேசேகரவின் நியமனத்திற்கெதிராக முஸ்லிம்கள் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் வழமையான நடைமுறை என்பதனால் “ இந்துமதவிவகாரம்” என்ற ஒரு சொல் இணைக்கப்பட்டிருப்பதற்காக சில தமிழ்த்தலைவர்கள் இவ்வாறு கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.
வடபுல முஸ்லிம்களின் அவலநிலை
———————————————-
வடபுல மக்கள் யுத்த காலத்தில் இரு தசாப்தங்கள் இடம்பெயர்ந்து சொல்லொணாத்துயரங்களை அனுபவித்தார்கள். யுத்தம் நிறைவடைந்து அடுத்த தசாப்தம் நிறைவடையப் போகின்றது. இன்னும் பலர் மீள்குடியேறமுடியாத அவலம், குடியேறிவர்களில் பாதிப்பேருக்குக்கூட இன்னும் வீடுகள் இல்லை. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அடிப்படைத் தேவைகள், தொழில்வாய்ப்பு என்று அவர்களது சோகக்கதை தொடர்வது ஒருபுறம், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் அம்மக்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளில் பன்னிரண்டாயிரம் ஏக்கரை மஹிந்த பறித்தார்; பின்னால் வந்த மைத்திரி பன்னிரண்டாயிரம் போதுமா? என்று ஒரு லட்சம் ஏக்கரைப்பறித்த வேதனைக்கு விடைதெரியாமல் விசும்புவது மறுபுறம்; என்ற நிலையில் இந்த அரசு  மீள்குடியேற்ற அமைச்சையாவது முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
ஆகக்குறைந்தது அதிகாரமில்லாவிட்டாலும் பிரதியமைச்சையாவது, இவ்வரசின் இந்த இறுதிக்கட்டத்திலாவது அந்த மண்ணில் பிறந்து அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதிக்குக் கொடுத்து அதன்மூலம் உரிய அமைச்சரின் ஒத்துழைப்போடு இந்த இன்னலுற்ற மக்களுக்கு எதையாவது அர்த்தமுள்ளதாக செய்யமுற்படும்போது வெறுமனே ஒரு சொல் ஒட்டிக்கொண்டது என்பதற்காக அதனைத் தூக்கிக்கொண்டு இனவாதம்பேசுவது சிற்றினவாதத்தின் கொடூரத்தைத்தான் காட்டுகின்றது.
பேரினவாதவாதமாக இருந்தால் என்ன, சிற்றினவாதமாக இருந்தால் என்ன; அவ்வினத்தைச் சேர்ந்த மொத்த மக்களும் அதனை ஆதரிப்பதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் திருமலை சண்முகா கல்லூரியின் அபாயா விவகாரத்திலும் கோப்பாப்புலவு சச்சிதானந்தத்தின் மாட்டிறைச்சி எதிர்ப்புக் கோசத்திலும் எத்தனையோ தமிழ் நல்லுள்ளங்கள் இந்த சிற்றனவாதத்திற்கெதிரா பலமாக குரல்கொடுத்ததை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நிரைவுகூருகின்றது.

அதேநேரம் இனவாதம் சில அரசியல்வாதிகளாலும் மதவாதிகளாலும்தான் உருவாக்கப்படுகின்றது. பேரினவாதத்தின் கொடுமையை இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள் இன்னுமொரு சமூகத்தை நோக்கி இனவாதத்தை கக்க முற்படுவது தர்மமாகாது; என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.