இந்துக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது நல்லாட்சி அரசாங்கம்

பழம்பெரும் இந்து சமயத்தினை இழிவுபடுத்தம் விதமாக சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவரை இந்து மத விவகார பிரதியமைச்சராக நியமித்து ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை நல்லாட்சி அரசாங்கம் புண்படுத்திவிட்டது. என கலைமாமணி இந்துப்பிரச்சாரசகர் அகரம் செ.துஜியந்தன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தமிழ் மக்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியதாகும்.  அம் மக்களின் பிரதிநிதிகள் பலர் பாராளுமன்றத்திலும், தங்களது கட்சியிலும் இருக்க அதனை மறந்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் மாற்று மதத்தினைச் சேர்ந்த ஒருவரை இந்துமத விவகார பிரதியமைச்சராக நியமித்துள்ளமையை இந்துக்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சமயமாகவும் தத்துவங்களின் கருமூலமாகவும் திகழ்கின்ற இந்துசமயத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய அடிப்படைக்கருத்தினைக்கூட அறிந்திராத மாற்று மத சகோரதரை இந்து மத பிரதியமைச்சராக நியமித்து இந்துக்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது. இச் செயற்பாட்டை  எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. இனங்களுக்கு இடையிலும் சமயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட நல்லாட்சி இன்று மதங்களுக்கு இடையில் விரிசலையும், முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றது. இதன் வெளிப்பாடாகவே இவ் பிரதியமைச்சர் விவகாரத்தை நோக்குகின்றோம்.
இலங்கை வாழ் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ள இவ்விடயத்தினை கருத்தில் எடுத்து உடன் இந்து மதத்தைச்சேர்ந்த ஒருவரை இந்துப் பிரதியமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன் என கேட்கப்பட்டுள்ளது.