கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை யூலை4 முதல் 24வரை திறந்திருக்கும்!

உகந்தையில் அம்பாறை அரசஅதிபர் இன்றைய மாநாட்டில் தீர்மானம்!
(காரைதீவு  நிருபர் சகா)
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் யூலை மாதம் 4ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது யூலை 24ஆம் திகதி மூடப்படும்.

 
இவ்வாறு அம்பாறைமாவட்ட  அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையிலான மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
 
உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் தொடர்பிலான முன்னோடிக்கூட்டம் நேற்று(12)செவ்வாய்க்கிழமை  பகல் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் யூலை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.
 
மேற்படிகூட்டத்தில் அம்பாறை அரச அதிபர் துசித பிவணிகசிங்க மொனராகல மாவட்ட மேலதிக அரசஅதிபர் பி.சோமரத்ன அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதேசசெயலாளர்களான சிவ.ஜெகராஜன்(திருக்கோவில்) வி.ஜெகதீசன்(ஆலையடிவேம்பு) எம்.முசர்ரப்(பொத்துவில்) கே.நவநீதன்(லாகுகலை பதில்) கிழக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் ஆலயதலைவர் சுதுநிலமே செயலாளர் கு.பஞ்சாட்சரம் பொலிஸ்அத்தியட்சகர் சமன் பொத்துவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் வெலிசற மற்றும் பிரதேச சபைத்தவிசாளர்கள் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு . 
 
உகந்தை முருகனாலய சூழலை சுத்ப்படுத்த சிரமதானம்செய்யவிரும்புவோர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்கிடையில் தமது பணிகளை பூர்த்திசெய்துமுடித்துவிட வேண்டும்.
 
காட்டுப்பாதை யூலை மாதம் 4ஆம் திகதி முதல் 20நாட்கள் திறந்திருக்கும். அக்காலப்பகுதியில் காட்டுப்பாதையால் பயணிப்போர் பொலித்தீன்பாவனையை முற்றாகத் தடைசெய்யவேண்டும். அன்னதானம் வழங்குவோர் பார்சலில் வழங்கமுடியாது. மாறாக ஆலய அனுமதியுடன் பீங்கானில் வழங்கவேண்டும்.
 
ஆலயத்திற்கு வரும் அடியார்hகள் பாதயாத்திரீகர்கள் அனைவருக்குமாக 31 தண்ணீர்த்தாங்கிகள் வைக்கப்படவேண்டும்.இராணுவம் விசேடஅதிரடிப்படை இதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.    திருக்கோவில் ஆலையடிவேம்பு மற்றும் லாகுகல பிரதேசசபைகள் தண்ணீர்பவுசர்களை வழங்கும். அம்பாறைக்கச்சேரியும் ஒரு வவுசரை வழங்கும். 
 
விசேடஅதிரடிப்படை இராணுவம் தண்ணீரை நிரப்பிவைக்கும்.
காட்டுப்பாதையால் செல்லும் யாத்திரீகர்களுக்கான பாதுகாப்பை பொலிஸ் வனஜீசராசிகள் திணகை;களம் இராணுவம் என்பன இணைந்துவழங்கும்.
 
உகந்தயையடுத்துள்ள குமண பறவைகள் சரணாலய முன்றலில் யாத்திரீகர்கள் கணக்கெடுப்பொன்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள். கடந்தாண்டு 25ஆயிரம் பாதயாத்திரீகர்கள் பயணித்துள்ளனர். இவ்வாண்டும் அதேஅளவான தொகை எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
இராணுவமும் வனஜிவராசிகள் திணைக்களமும் இணைந்து இக்கணக்கெடுப்பை எவ்வித கெடுபிடியுமின்றி நடாத்துவர்.
ஆலயவளாகத்தில் மின்சார வசதி சுகாதாரவசதி யாத்திரீகர்களுக்கு நிறைவாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மலசலகூடவசதியும் சுத்தமாக வழங்கப்படும்.போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.