இனத்துக்கு போராடியவர்களை நிற்கெதியாக விட்டது யார் ?புலம்பெயர்ந்த, உள்ளூர் தமிழ் தேசியங்களே.

சிவில் பாதுகாப்பு படை அதிகாரிக்கு கொடுத்த பிரியாவிடை பற்றி பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,சிலர் ஆதங்கம் கொண்டு இது நடிப்பு போலி என சொல்லி தங்களை திடப்படுத்தி கொள்கிறார்கள் அவர் அவருக்கு ஒரு பார்வை இருக்கும் இருக்க வேணும் சரி இருந்திட்டு போகட்டும் ….

இதில் ஒரு படி மேல போய் மானம், கௌரவம் பற்றி எல்லாம் பேசுவது தான் வியப்பு முள்ளிவாய்களில் இருந்து ஆடைகள் களைந்து அவர்கள் வந்த போதே அவர்கள் அனைத்தையும் துறந்த ஓர் நடைபிணங்கள் ஆக தான் இன்றும் வாழ்வை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் …

இழப்பு, வலிகளுக்கு அப்பால் அவர்கள் மேல் விழுந்த பொருளாதார சுட்டியல் வீட்டில் உழைக்க கூடிய ஆண்களை இழந்த குடும்பம்,கணவனை இழந்த பெண்கள்,உடல் உறுப்புக்களை இழந்த ஆண், பெண்கள் அன்றாடம் கூலி வேலைக்கு கூட போக முடியாத சிரமத்துக்கு மத்தியில் வாழும் குடும்பங்களுக்கு சோறு போட்டவன் தெய்வமாக தெரிவது ஒன்று பெரும் குற்றம் இல்லையே …

இடம்பெயர்வு வாழ்வில் வெளிநாட்டில் குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் உறவுகள் நிலை ஓர் அளவு வாழ்வை நகர்த்த முடிந்தது, ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்பவன் வாழ்வு இன்று வேலை வந்தால் தான் அடுப்பெரியும் நிலை…

தவறு இனத்துக்கு போராடியவர்களை நிற்கெதியாக விட்டது யார் ?

சுகமாக அரசியல்வாதிகள் செய்யவில்லை என்று தப்பி போகும் வேலையை முதல் நிறுத்துங்க நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்னும் கேள்வியை வையுங்கள்,புலம்பெயர் தேசத்தில் இன்றும் புலிகள் பெயரால் நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னும் ஒரு வாசகம் ஓரமாக இருக்கு,பத்து வருடமா இவ்வாறு சேகரிக்கும் நிதி எங்கு போகிறது அது சரியாக போய் இருந்தால் இன்றைய காட்சி வர வாய்ப்பில்லை அல்லவா …

வெளிநாட்டில் இருந்து ஊருக்கும் போய் வந்து நம்மவர் சொல்லும் வசனம் “அங்க சனம் அந்தமாதிரி வாழுது” ..

ஆம் ..யார் அப்படி வாழ்வது என்றால் போறவரின் உறவாக இருக்கும் ஏனெனில் அவர்களுக்கு வெளிநாட்டு உதவி இருக்கு.கட்டுநாயக்காவில் இறங்கி நேர கண்டிவீதியால் யாழ்ப்பாணம் போய் நல்லூர் தேருக்கும் நிண்டு செல்பி எடுத்திட்டு வரும் ஆளுக்கு தெரிவதில்லை போர் தின்ற மக்களின் துயர் …

கொஞ்சம் கண்டி வீதியால் பயணிக்கும் போது கிழக்கு, மேற்காக உள் வீதியில் ஒரு மூன்று கிலோமீற்றர் சென்று வாருங்கள் இன்னும் போரின் வடுக்கள் தாங்கி ஒரு மக்கள் கூட்டம் வாழ்வது உங்களுக்கு தெரியும், அவர்கள் தான் இன்று கண்ணீர் விட்டு பிரியாவிடை கொடுத்த மக்கள் என்பதை உணர்வீர்கள்…….

ஏதோவொரு வேலையாவது தந்து அடுப்பெரிக்க உதவிய ஒருவன் தங்களை விட்டு போவது என்பது அவர்களுக்கு கண்ணீர் தான்,நீங்கள் அவரை ஒரு இராணுவ அதிகாரியாக பார்க்கிறீர்கள் அவர்கள் அவரை ஒரு சக மனிதனாக பார்க்கிறார்கள் இனி வருபவன் ஒரு இனவாத போக்குடன் வந்தால் தங்கள் வாழ்வு குறிந்த பயம் தான் அந்த கதறல் அழுகை அனைத்தும்…

உங்களை தேசியத்தின் உச்ச மனிதராக காட்டிக்கொள்ள அந்த சாமானியர்கள் வையாதீர்கள் புலம்பெயர்ந்த, உள்ளூர் தமிழ் தேசியங்களே.