காரைதீவு பிரதானவீதியில் அமைக்கப்பட்டுவரும் பாரிய வடிகான்  அமைப்புப்பணிகள்இடைநிறுத்தம்

காரைதீவு பிரதானவீதியில் அமைக்கப்பட்டுவரும் பாரிய வடிகான்  அமைப்புப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப்பிராந்திய நிறைவேற்றுப்பொறியியலாளர் எஸ்.பரதன் காரைதீவுப் பிரதேசசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  மேற்படி முடிவை அறிவித்துவிட்டு வெளியேறினார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்களுக்கிடையிலான இக் கலந்துரையாடல் நேற்று(8) தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.

 
வடிகான் அமைப்புத் தொடர்பில் பொதுமக்கள் காரைதீவுப் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் குறித்த பிரதேசத்திற்கான பிரதேசசபை உறுப்பினர் ச.நேசராசா ஏனைய உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் திருமதி சி.ஜெயராணி ஆகியோரிடம் தெரிவித்த முறைப்பாடுகளையடுத்து மேற்படி கலந்துரையாடல் நேற்று(8) இடம்பெற்றது.
 
130மீற்றர் வடிகானுக்கென ஆரம்பித்த இவ்வேலைகள் தற்போது 110மீற்றருடன் முடிவுறுத்தப்படுவதால் வடிகான் நீர் நேரடியாக தனியார் வயல்காணியினுள் பாய்ந்தோடும் நிலையுருவாகும்.. இதனால் அருகிலுள்ள வயல்காணிகளும் ஆபத்தை எதிர்நோக்கும் என பொதுமக்கள் தரப்பில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டன.
 
இதனையடுத்து குறித்த வடிகான் அமைப்புப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்களான ச.நேசராசா ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் முன்னாள் உபதவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விஜயம்செய்து களநிலவரத்தைப் பார்வையிட்டனர்.
 
இவ்வடிகானால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுமெனஅவர்கள் கருதியதனால் விடயத்தை தவிசாளரிடம் எத்திவைக்க அவர் வீதிஅபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப்பொறியியலாளருடன் பேசியதன் பலனாக பிரதேசசபையில் மேற்படி கலந்துரையாடல்கூட்டம் நடைபெற்றது.
 
கலந்துரையாடலின்போது  பொறியிலாளர் கூறுகையில் ‘பிரதானவீதி எமது ஆளுகைக்குள் உட்பட்டிருப்பதால் உள்ளுராட்சி சபைக்குத் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் எமக்கில்லை. அதற்கான வரைபடத்தையோ எதனையோ வழங்கமுடியாது. தேவையானால் தகவலறியும் சட்டம் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.என்றார்.
 
இவ்வடிகான் அமைப்பு தொடர்பில் உறுப்பினர்கள் நிலவும் சாதக பாதக நிலைமைகளையிட்டு கலந்துரையாடினர்.
 
இறுதியில் பிரதேசசபையின் எழுத்துமூல சமர்ப்பணத்தை எதிர்பார்த்து தற்காலிகமாக நிருமாணப்பணியை இடைநிறுத்துவதாக பொறியியலாளர் அறிவித்துவிட்டு தானாக வெளியேறினார். 
உறுப்பினர்கள் கூறுகையில்:அரச அதிகாரியொருவர் இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளது கருத்தை செவிமடுக்காமல் வெடுக்கென்று தன்பாட்டில் கதைத்துவிட்டு வெளியேறியமை கண்டனத்துக்குரியது என்றனர்.
எந்த நிறுவனமென்றாலும் குறித்த உள்ளுராட்சிசபையிடம் தெரிவிக்காமல் அப்பகுதிக்குள் எவ்வித வேலைத்திட்டத்தையும் செய்யமுடியாது என்ற நடைமுறைசட்டதிட்டத்தை அந்த அதிகாரி அறியாதது கவலைக்குரியது என உறுப்பினரொருவர் தெரிவித்தார். 
தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்: எந்தத்திட்டமென்றாலும் அது மக்கள் நலன்சார்ந்ததாக இருக்கவேண்டும். மக்களின் கருத்திற்கு குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளது கருத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் . மக்களுக்கு பாதகமான எந்தவொரு திட்டத்தையும் காரைதீவுக்குள் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை ஞாபகமூட்டவிரும்புகிறேன். என்றார்.