கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஊழியர்களினதும்  பொது மக்களினதும் ஒத்துழைப்புக்களே.

 வைத்தியட்சகர் முரளீஸ்வரன்

கேதீஸ்)
கல்முனை ஆதாரவைத்தியசாலையானது பல தேசிய விருதுகள் பெற்று, அகில இலங்கையின் ஆதார வைத்தியசாலைகளின் தரத்திலும் மேலாகவும்,ஓர் ஆதாரவைத்தியசாலைக்கு தேவையான தகுதிகளையும்  விட அதிக வளங்களுடனும் காணப்படுகின்றது. இதற்கு நான் மட்டும் காரணமல்ல சுகாதார அமைச்சு, அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் சகல தரப்பு உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் சுகாதார துறை சாராத ஊழியர்கள் அனைவரினதும் பங்களிப்புடன், இவ் வைத்தியசாலையின் முக்கியமானவர்களாக கருதப்படும் பொதுமக்கள் ஆகியோரினதும் பங்களிப்பும் மிக மூல காரணமாக அமைகின்றது.

வைத்தியசாலையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் உரையாற்றுகையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
இன்று இங்கு 13 வைத்திய நிபுணர்கள் பல்வேறுபட்ட துறைகளில் மக்களுக்கு மிக சிறந்த நிபுணத்துவ சேவையை  ஆற்றி வருகின்றனர். அத்துடன் அனைத்து வைத்தியர்கள், துறை சார்ந்த உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் என அனைவருமே மிக அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவதை நானும் அறிவேன்.அதனாலேயே பாராட்டு விழாக்களும் நடாத்துகின்றோம்.
ஆனால் வைத்தியம் சார்ந்த சட்டப்பிரச்சனைகள், எமக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள், இறப்பு வீதம், பிறப்பு வீதம், சிசுமரண வீதம், மகப்பேற்று தாய் மரண வீதம், என்பனவும் ; அவற்றிற்கான மூல காரணங்களும் பலரிற்கு தெரியாமலுள்ளது . தெரிந்திருக்கவும்
வாய்ப்பில்லை. இதனால் இதனை தெளிவுபடுத்த உத்தியோகஸ்தர்கள்  ஊழியர்கள் அனைவருக்கும் வாராந்தம் ஒவ்வொரு தலைப்பில் முறையான விளக்கம் அளிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நாம் பல ஆய்வுகள் மூலம் மக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை அறிந்து இவ் வைத்தியசாலையிலேயே சகல சேவைகளையும் பெறும் வாய்ப்பினை வழங்கி வருகின்றோம். இன்னும் வழங்கவுமுள்ளோம்.
குறிப்பாக எக்கோ பரிசோதனைக்காக
(மின் ஒலி வரைபு) நாம் நோயாளிகளை கண்டி அல்லது மட்டக்களப்பு இற்கு இரவு வேளையில் அனுப்ப வேண்டிய நிலையிலிருந்தோம். வயதானவர்கள் பிரயாணம் செய்வது மட்டுமின்றி உதவிக்கு செல்பவர்  பிற இடங்களில் வெளியில் பெண்களாகவிருந்தாலும் தனியாக நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையுமிருந்தது. ஆனால் இன்று இந்நிலை மாற்றப்பட்டு இவ் வைத்தியசாலையிலேயே இப் பரிசோதனை இலவசமாக நடைபெற செய்துள்ளோம் .
இலங்கையின் ஆதாரவைத்தியசாலைகளில் இப் பரிசோதனை இங்கு மட்டுமே நடைபெறுகின்றது.
மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது .தினசரி இங்கு 3 நோயாளர்களுக்கான இருக்கை தயார்நிலையில் உள்ளது. இச் சேவையை தனியார் வைத்தியசாலைகளில் பெறுவதற்கு 40000/=தொடக்கம் 45000/= வரை நாளொன்றிற்கு செலுத்த வேண்டி வரும். எம்மால் இங்கு முற்றுமுழுதான இலவச சேவையாக நடாத்தப்படுகின்றது.
அண்மையில் கொழும்பு வைத்திய சாலை ஒன்றிலிருந்து  இங்கு ஓர் நோயாளி மாற்றப்பட்டிருந்தார். அவரிற்கான அவசர அதிதீவிர சிகிச்சை உதவியை பொறுப்பேற்றிருந்தோம் இப்போது அவர் குணமடைந்த நிலையிலுள்ளார்.
இலங்கையில் வசதிகள் கொண்ட சத்திர சிகிச்சைகூடத்தில்  ஒன்றாக எமது சத்திர சிகிச்சைகூடம் இப்போது நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இது எமது சேவை தரத்தை கருத்திற்கொண்டு அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற வளங்கள் இன்னும் வழங்கப்படவுள்ளது .
 இவை அனைத்தையும் நாம் ஒன்று குவிப்பது எமது மக்களின் நலனுக்காகவே. மக்களுக்காக செயல்படும் இவ் வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் மக்களின்  கருத்துக்களுக்கு தகுந்த விளக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கும் தகுந்த அறிவும் விளக்கங்களும் வழங்கப்படவுள்ளது.
மேலும் எமது வளங்கள் பற்றி நான் கூறுவது தேவையற்ற ஒன்றாகவே நினைத்திருந்தேன். ஆனால் இவ் வைத்தியசாலையின் வளங்கள், மக்கள் மத்தியிலும், மனதிலும் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது. அதை தெளிவுபடுத்தும் பொறுப்பும் எம்முடையதுதான். நாம் தெளிவான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
இதற்காகவே நாம் சில புது முறைகளை கையாளவேண்டியுள்ளது.
மட்டக்களப்பு  பிரதேசத்தில் சில தவறான கருத்து பரிமாற்றத்தினால் ஒரு நிபுணர் மனம்நொந்து மட்டக்களப்பு பிரதேசத்தை விட்டு இடம்மாறவுள்ளார்.
ஆனால் எமது வைத்தியசாலையை பொறுத்தவரை அவ்வாறில்லை. பல பொது அமைப்புக்கள், மத தலைவர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும்  எமது வளர்ச்சிக்கு  பங்காளர்களாக உள்ளனர். எந்த நேரத்திலும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுடன் தகுந்த உதவியும் புரிகின்றனர். இதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எனவும் , இவ் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன் எனவும் கூறினார்.