பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட ஒன்றிணையுமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல்

செ.துஜியந்தன்
கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் தேர்தல்களில் ஒரு பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட ஒன்றிணையுமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.

கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் இருப்பையும் அரசியல் பலத்தையும் ஒற்றுமையாக நிறுபிக்கும் வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் ஒரு பொதுச்சின்னத்தில் இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, கலாசார ரீதியில் கிழக்குத்தமிழ் மக்கள் பின்னடைவையே சந்திப்பார்கள். கிழக்குத் தமிழ் மக்களின் நலன் கருதி அனைத்து தமிழர் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.
இவ்வாறு கிழக்குத்தமிழர் ஒன்றியம் வேண்டுகோள்விடுத்துள்ளது. கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு மத்திய சுற்றாடல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர்களான  சிரேஸ்டசட்டத்தரணி தட்சிணாமூர்த்தி சிவநாதன், செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், மாவட்ட செயற்குழு தவைலர் பேராசிரியர் மா.செல்வராஜா, மாவட்ட செயற்குழு செயலாளர் பொறியியலாளர் வ.பரமகுருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் நோக்கம் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவை முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது. அங்கு பேசிய சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன்….
கிழக்கு தமிழர்களின் அரசியல் பொருளாதார மற்றும் காணி உரிமை உட்பட சகலவழிகளிலும் தமிழர்களின் நிலமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. எதிர்வரும் தேர்தலில் தமழிர்கள்  சிந்தித்து செயற்படாவிட்டால் எமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாது போய்விடும். ஓவ்வொரு கட்சியும் பிரிந்து நின்று வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் தமிழர்களின் அரசியல் பலம் இல்லாமல் போய்விடும் பேரம் பேசும் சக்தியை நாம் இழந்துவிடுவோம்.
கிழக்குத் தமிழர் ஒன்றியம் அரசியல் கட்சியல்ல. நாம் அரசியலில் போட்டிபோடப்போவதும் இல்லை. எமது நோக்கும் கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வைத்து அரசியல் பலத்தை கூட்டி பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதாகும்.
செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவிக்கையில்…
நடைபெறப்போகும் தற்போதைய மாகாணசபைத் தேர்தல் மூலம் கிழக்கில் 38 ஆசனங்களே கிடைக்கும். இதில் குறைந்தது 20 ஆசனங்களைப் பெறும் கட்சியே ஆட்சியமைக்கும். தனித்துக்கட்சிகள் போட்டியிட்டால் எதுவும் ஆட்சியமைக்கமுடியாது. இதனாலேயே சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒற்றுமைப்படுமாறு கேட்கிறோம். எமது ஒன்றியத்தினால் அனைத்து தமிழ் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். இதனை எதிர்வரும் ஜீலை 15 ஆம் திகதிக்கு முன்பு நடத்திமுக்க எண்ணியுள்ளோம். கிழக்கு தமிழர்கள் சிந்தித்த முடிவெடுக்காவிட்டால் கிழக்குமாகாண தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாகிவிடும் என்றார்.