நிலாவெளியில் அமைந்துள்ள அழகிய புறாமலைதேசிய பூங்கா பாதுகாக்கப்படவேண்டும்.

பொன்ஆனந்தம்

திருகோணமலை நிலாவெளியில் அமைந்துள்ள அழகிய புறாமலைதேசிய பூங்கா சூழலை பாதுகாக்க உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என வனஜீவிகள் திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் சட்டத்தரணி லலித்குமார வேண்டுகோள்விடுத்தார்.

தேசிய சமுத்திரத்தினத்தை முன்னிட்டு மேற்படி பூங்காவில் நடந்த நிகழ்வில் அவர்கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி கோரிக்கையை அவர் விடுத்தார்.

கடல்சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் வடகிழக்கு மாகாண முகாமையாளர் எஸ்.ஸ்ரீபதி தலமையில் நடந்த இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த 50இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த தேசிய பூங்காவானது எமது வனஜீவராசிகள் திணைக்களத்தின் பரிபாலனத்தில் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகைதருகின்றனர். இவர்கள் மூலம் நாளொன்றுக்கு 5லட்சம் வரையான நிதி அரசுக்கு வருமானமாக வருகிறது. இந்நிதி முழமையாக திறைசேரிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.

ஆனாலும் உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் பூங்கா சூழலை மாசுபடுத்தும் விதத்தில் களிவுப்பொருட்களை கொண்டு வந்து வீசி;செல்கின்றனர். அவ்வாறு செய்யாமல் இந்த பெறுமதி வாய்ந்த அழகான பூங்காவை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். குறித்த ஊடகவியாலளர்களை தெளிவு படுத்தும் செயலமர்வும் கள விழிப்பு நிகழ்வும் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இன்று இறுதி நாளாகும்