படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் நீதியான விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும்

கடத்தப்பட்டு, காணாமல் போன படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியைப் பெற்றுக் கொடுக்க நல்லாட்சி எனச் சொல்லப்படும் இந்த அரசாங்கம் நடவடிக்க எடுக்க வேண்டும் என வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் 14 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா, வாடிவீட்டு மண்டபத்தில் சங்கத்தின் செயலாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபன் தலைமையில் நேற்று நடைபெற்ற போதே அச் சங்கத்தின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யுத்த காலத்திலும் அதனையண்டிய காலப்பகுதியிலும் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர் கடதப்பட்டும், காணாமல் போக செய்யப்பட்டும் உள்ளதுடன் படுகொலையும் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில், கடந்த 2004 மே 31 ம் திகதி மட்டக்களப்பில் வைத்து ஆயுத குழு ஒன்றினால் படுகொலை செய்யபட்ட ஐயாத்துரை நடேசன் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஆவார்.

இராணுவத்தின் தொடர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் தமது ஊடக பணியை திறம்பட நடாத்தியவர்களில் இவரும் ஒருவர். இவரது படுகொலைக்கான நீதி விசாரணை நடைபெறாத நிலையில் 14 வருடங்கள் கடந்து இன்று நினைவேந்தல் நிகழ்வை நடாத்தி நிற்கின்றோம். இவரை போலவே இன்னும் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யபட்ட நிலையில் சாட்சிகள் இருந்தும் அவர்களின் கொலைக்கான நீதி விசாரணை கிடைக்காமல் இருப்பதனையிட்டு, ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் கவலை அடைவதுடன் எமது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்திடம் நேரடியாக இது தொடர்பில் சுட்டிகாட்டி மகஜரும் கையளித்தோம். ஆனாலும் அதற்கான முன்னோக்கிய நடவடிக்கைகள் நடைபெறவில்லை. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகசுதந்திரம் ஒடுக்கபடுவதும், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யபடுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளள ஊடகவியலாளர் நடேசனின் 15 வது அஞ்சலி நிகழ்வுக்கு முன்னதாக என்றாலும் அவரது கொலைக்கு காரணமானோர் தண்டிக்கபட வேண்டும். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களிற்கும் நீதி கிடைக்கவேண்டும் என்று வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கமாகிய நாம் அனைத்து தரப்புகளிடமும் வலியுறுத்துகிறோம் என்று கூறினர்.

முன்னதாக ஊடகவியலாளர் நடேசன் அவர்களின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலித் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் நினைவுபகிர்வை மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை மற்றும் உறுப்பினர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊடகவியலாளரகள் என பலரும் கலந்து கொண்டனர்.