மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயம் நள்ளிரவில் உடைப்பு! வாள்களுடன் வந்தவர்களின் கைவரிசை

வரலாற்று பழமைவாய்ந்த நிந்தவூர் மாட்டுப்பளை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் கதவுகள் விசமிகளால்  நள்ளிரவு வேளையில் (7) உடைக்கப்பட்டுள்ளது..

ஆலயத்திற்கு நள்ளிரவு வேளையில் கூரிய ஆயுதங்களுடன் சென்ற ஒரு குழுவினர் ஆலயத்தின் மூலஸ்த்தான கதவுகளை உடைத்த வேளை அங்கே தங்கியிருந்த கதிர்காம யாத்திரிகர் ஒருவர் சத்தம் கேட்டு எழும்பிபோது கதவை உடைத்தவர்கள் அவரை வாளைக்காட்டி அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை ஆலய வேலைகளுக்காக ஆலயத்திற்கு சென்ற தலைவர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள்  மூலஸ்த்தான கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் அதன் பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து  ஏனையோருக்கும் அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு காரைதீவு தவிசாளரும் ஆலயத்தின் முன்னாள் உப தலைவரும் தற்போகைய நிருவாக சபை ஆலோசகருமான ஜெயசிறல் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோரும் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களும்   ஆலயத்திற்கு  வந்து  பொலிஸாருக்கு அறிவித்ததுடன்  முறைப்பாடும்  செய்ததுடன் ; பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளும் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

இவ்விடயம் தொடர்பாக காரைதீவு தவிசாளரும் நிருவாக சபை ஆலோசகருமான ஜெயசிறில் விபரிக்கையில்….

மிகவும் பழமைவாய்ந்த இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு மீனாட்சிஅம்மன் ஆலயமான இது தற்போது கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது இதற்கு முன்னரும் இவ்வாலயம் இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டுள்ளன. குறித்த ஆலயம் வயல் வெளியின் நடுவே சன நடமாட்டம் அற்ற இடத்தில் அமைந்துள்ளதுடன் சுற்றிவர தமிழர்கள் குடியிருப்புக்களும் இல்லை .

ஆலய மூலஸ்த்தான கதவும் அதன் பூட்டுக்களும் உடைக்கப்பட்டுள்ளது பொலிஸார் வரவழைக்கப்பட்டு பார்வையிட்டோம் மூலஸ்த்தானத்தில் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை ஆலயத்தில் தங்கியிருந்த கதிர்காம யாத்திரிகர் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தவேளை அவரை வாளுடன் வந்த திருட்டு கும்பல் அச்சுறுத்திவிட்டு பின்வழியால் தப்பிச் சென்றுள்ளார்கள்.

மிகவும் பண வசதியற்ற இவ்வாலய கட்டிட வேலைகள் பொது மகக்ளின் பங்களிப்புடன் நடைபெற்று கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் நடைபெற்றுவருகிறது மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஆலயத்திற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றார்கள். கும்பாபிஷேக வேலைகளும் பொருளாதார சிரமத்துடன் நடைபெற்று வரும் வேளையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளமை மக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்திகிறது.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு ஆலயங்கள் சிலைகள் உடைப்பது திருட்டு சம்பவங்கள் தொடர்பானவர்கள் கைது செய்யப்பட்டு அதி உச்ச தண்டனை வழங்கப்படாமையே இவ்வாறனவர்கள் இலகுவாக இச் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறு மதத்தலங்களை சிலைகளை உடைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.