மாத சம்பளத்தில் வீதிக்கு கிறவல் பரவி மக்கள் பாவனைக்கு கையளித்த பிரதேசசபை உறுப்பினர்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமநேசன் தனது இரண்டாம் மாத சம்பளத்தில் வீதிக்கு கிறவல் பரவி மக்கள் பாவனைக்கு புதன்கிழமை கையளித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் 5ம் வட்டார உறுப்பினர் க.கமநேசன் இரண்டாம் மாத கொடுப்பனவை கொண்டு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு விபுலானந்தர் வீதியிலுள்ள சிறிய குறுக்கு வீதி (ஒழுங்கை) ஒன்றுக்கு கிறவலிட்டு செப்பனிட்டுள்ளார்.

இவ் வீதியானது பிரதேச சபையின் வீதி செப்பனிடல் விதிகளுக்கு உட்படாததாலும், அப்பாதையை பயன்படுத்தும் ஐந்து குடும்பத்தினரது வேண்டுகோளுக்கு இணங்க தனது இரண்டாம் மாத சம்பளமான பதினையாயிரம் ரூபாவும் மற்றும் எனது சிறு தொகை பணமாக பத்தாயிரம் என்பவற்றை கொண்டு வீதியை புனரமைப்புச் செய்து மக்கள் பாவனைக்கு கொடுத்துள்ளேன் என பிரதேச சபை உறுப்பினர் க.கமநேசன் தெரிவித்தார்.

அத்தோடு எனது ஒவ்வொரு மாத சம்பளமும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் எனவும், அத்துடன் கல்வி வளர்ச்சிக்கும், வறியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எனது உதவி அதிகம் இருக்கும் என்றும் சபை உறுப்பினர் க.கமநேசன் மேலும் தெரிவித்தார்.