பெரியநீலாவணையின் விடிவெள்ளி அமரர் வேதநாயகம் அதிபர் படுகொலை செய்யப்பட்டு இன்று 23 வருடங்கள்!

(பாண்டிருப்பு கேதீஸ்)
பெரியநீலாவணை கிராமத்தை நேசித்த இந்த கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்ட பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் அதிபர் வேதநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று (06.06.2018) ஆண்டுகள் 23 ஆகின்றது.

பாடசாலையையும் தனது சொந்த கிராமத்தையும் இரு கண்கள் போல் நேசித்து கல்வி, சமூக வளர்ச்சிக்கு அல்லும் பகலும் பாடுபட்டவர்.

இப்பிரதேச மக்களாலும், மாணவர்களாலும், அதிபர்கள் ஆசிரியர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட இன்றும் அன்னாரின் சேவைகளை நினைத்து பேசுகின்ற அளவுக்கு கல்விக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட சமூகப்பற்றுள்ள மனிதர்.

1953 ஆம் ஆண்டு பெரியநீலாவணையில் பிறந்த ஒரு சிறந்த ஆளுமை 1985 ஆம் ஆண்டு கண்டி பேராதனிய பல்கலைக் கழகத்தில் வர்த்தகமானி பட்டம் பெற்று அக்கரைப்பற்று இராம கிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக முதலாவது நியமனம் பெற்றார்.

18.01.1987 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையை பொறுப்பேற்றார். கொழும்பு பல்கலைக்க கழகத்தில் உள்வாரி மாணவராக பட்டப்படிப்பையும் மேற்கொண்டு அதிபர் தரம் II சித்தியடைந்தவராவார்.புகழ் பெற்ற  கவிஞர் நீலாவணணின் மகளை திருமணம் முடித்து அவரின் மருமகனார்.

மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் என்பவற்றில் மிகவும் கரிசனையாக செயற்பட்டதுடன் பாடசாலையின் வளர்ச்சியிலும் மிகவும் அக்கறையாக செயற்பட்டு இப்பாடசாலையை 1C பாடசாலையாக தரமுயர்த்தியதுடன், உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் பலர் பல்கலைக்கழகம் செல்வதற்கு உந்து சக்தியாக திகழ்தவர்.

1995 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் ஆறாம் திகதி இனம் தெரியாத தீய சக்தியால்  படுகொலை செய்யப்படும்வரை இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றியிருந்தார்.

இவரின் இழப்பு பெரியநீலாவணை மக்களுக்குமட்டும்லலாது இப்பிரதேச மக்களுக்கே பேரிழப்பாகும்.

அன்னார் மறைந்த இன்றைய நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.