கதிர்காம பாதயாத்திரீகர்கள் நேற்று வடக்கிலிருந்து கிழக்கிற்குள் பிரவேசம்!

9நாட்களின் பின்னர்  குச்சவெளியில்:  
காரைதீவு குறூப் நிருபர் சகா
 
யாழ்.செல்வச்சந்நதியிலிருந்து கடந்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகிய வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் (3) ஞாயிற்றுக்கிழமை வடமாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்குள் பிரவேசித்தனர்.

 
வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் 7மாவட்டங்களையும் இணைத்து 54நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து இடம்பெறும் இப்பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படுகின்றது.
 
கடந்த 19தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைக்கடந்து நேற்று  அவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்குள் காலடிஎடுத்துவைத்தார்கள்.
நேற்றிரவு தென்னமரவாடி விநாயகர்  ஆலயத்திலிருந்து தலைவர் வேல்சாமி தகவல்தருகையில் யாழ். சந்நதியிலிருந்து 48பேருடன் ஆரம்பித்த நாம் வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தில் சேர்ந்த அடியாhர்களுடன் தற்போது 103பேருடன் முருகனருளால் பயணித்துவருகின்றோம்.
இடையில் மாமூலை முருகனாலயத்தில் வைத்து அங்குள்ள வைத்திய அதிகாரி பண்டார தலைமையிலான குழுவினர் நடமாடும் வைத்தியமுகாமை நடாத்தினர்.
 
எம்முடன் லண்டனிலிருந்து பாதயாத்திரைக்கென வருகைதந்த யாழ். மாணிக்கவாசகர் மற்றும் நீர்கொழும்பு சிங்கள அடியார் பெர்ணாண்டோ ஆகியோரும் பயணிக்கின்றனர்.
வரும்வழியில் நாம் தங்கும் ஆலயங்களில் விசேட கூட்டுப்பிரார்த்தனை சிரமதானம் சரியை வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றோம். எவ்வித விக்கினமுமின்றி முருகனருளால் நடந்துவருகின்றோம் என்றார்.
இவர்கள் யுலை 13ஆம் திகதி அதிகாலை செல்லக்கதிர்காமத்தைச் சென்றடைவார்கள்.
கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவம் யூலை13இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28இல் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.