கொக்கட்டிச்சோலைப் பகுதியில் வாவிக்கரையோரங்களை துப்பரவு செய்யும் பணி.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை மற்றும் மண்முனை வாவியிலிருந்து மகிழடித்தீவு பிரதானவீதிகளின் ஓரங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடு இன்று(05) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர், உறுப்பினர்கள், சபை ஊழியர்கள், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஊழியர்கள் ஆகியோர்கள் இணைந்து இச்செயற்பாட்டை மேற்கொண்டனர்.
உலகசுற்றாடல் தினத்தினை முன்னிட்டும், டெங்குநுளம்பு பெருகும் இடங்களை இல்லாமல் செய்யும் நோக்கிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு நோய் தாக்கத்தில் மாகாண ரீதியில் கிழக்கு மாகாணம் 2வது இடத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் , மாவட்ட மட்டத்தில் 2வது இடத்திலும் காணப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு மாத காலத்தினுள் கிழக்கு மாகாணத்தில் சுமார் 4400 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும், அதில் அதிக (7) மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வரை 2900 டெங்கு நோயாளர்களும், திருகோணமலையில் 436 பேரும் , கல்முனை 937 பேர் மற்றும் அம்பாறை 65 பேர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இவ்வருடத்தில் எட்டு(8) நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையிலும், இடையிடையே மழைபெய்கின்ற சூழலினாலும் இச்சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.