யானைத் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பு , உடமைகள் சேதத்திற்கு இழப்பீடு

யானைத் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் உடமைகளுக்கு ஏற்படும் சேதத்துக்கும், தனது அமைச்சு இழப்பீடுகளை வழங்கும் என்று வன ஜீவராசிகள் நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற யானைகளைப் பிடித்து, ஹொரவப்பொத்தானையிலுள்ள யானை சரணலாயத்தில் விட்டு, அங்கு அவற்றைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யானை மற்றும்; மனிதர்களுக்கிடையிலான பிரச்சனைகள் தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இக்கூட்டம் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மற்றும் வன விலங்குகளால் ஏற்படுகின்ற பிரச்சனைகள், அதற்கெதிரான மற்றும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

இக்கூட்டத்தில் அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம், யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடுகளை வழங்க தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான நிதியையும் திணைக்களம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

வருடமொன்றுக்கு உணவின்மையால், 30 யானைகள் உயிரிழக்கின்றன. நாளாந்தம் மனிதனை யானைகள் தாக்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இவ்வாறு மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற யானைகளைப் பிடித்து ஹொரவப்பொத்தானையிலுள்ள யானை சரணலாயத்தில் விட்டு, அங்கு அவற்றைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அச்சரணாலயத்தில் 1,000 யானைகளைப் பராமரிக்கக் கூடிய வகையில், சரணலாயத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், மின்சார வேலிகளை அமைப்பதற்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி வங்கி வைப்பிலுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அதனைக் கொண்டு மின்வேலிகளை அமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக, கிழக்கு மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த மின்சார வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், எதிர்காலத்தில் யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களையும் உடமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் தேவரபெரும, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சி.யோகேஸ்வரன், வனஜுவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சி.சூரியபண்டார, உதவிப்பணிப்பாளர் எம்.விக்கிரமதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் என்.சுரேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.