உள்ளுராட்சி நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பில் தமிழ்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றது.

உள்ளுராட்சி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றமைக்கான முழுப்பொறுப்பையும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் – இரா .துரைரெத்தினம்

மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சு ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான அபிவிருத்தி விடயங்களிலும், நிதி ஒதுக்கீட்டின் போதும், கடந்த காலங்களில் தமிழ்பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன. இதற்கான முழுப்பொறுப்பும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு இனிமேலும் இது தொடரக்கூடாது என முன்னாள் கி.மா.சபை சிரேஷ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான இரா .துரைரெத்தினம் (ரெட்ணம்) தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்றில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆரம்ப காலகட்டத்தில் முன்னால் ஜனாதிபதி பிறேமதாசா அவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் உள்ளுராட்சி மன்றங்கள் நன்றாக செயல்படத் தொடக்கின. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

உள்ளளுராட்சி மன்றங்களை தரமுயர்த்தல், உபவிதிகளை தயாரித்தல்,புதிய நிதிவரவை ஏற்படுத்ததல் போன்ற கூடிய அதிகாரங்கள் கூட உள்ளுராட்சி மாகாண சபைக்கு உள்ளன. இதை பரீட்சித்துப் பார்க்கவில்லை. இத்திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தால் நீதிமன்றம் சென்று வெற்றி கொள்வதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, குருநாகல், கண்டி, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகள் நகரசபையாகஆரம்பிக்கப்பட்டபோதுஉருவாக்கியதிருகோணமலையில் உள்ள நகர சபை இன்னும் மாநகர சபையாக தரமுயர்த்தப்படவில்லை. (கிரான் பிரதேச செயலகத்திற்கு தனியான பிரதேசசபை உருவாக்காமல் பிதேசசபையை உருவாக்குவதற்கென இரண்டு அமைக்கப்பட்ட குழுக்களை கலைத்து புதிய பிரதேசசபையை உருவாக்காமல் அப்பிரதேசத்திலுள்ள காணிகளை ஏனைய பிரதேசத்திற்கு கபளிகரம் செய்யப்பட்டுள்ளது)

இம்மாவட்டத்தில், பல உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கும் போது மத்திய உள்ளுராட்சி அமைச்சரால் முஸ்லிம் பகுதிகளிலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் மட்டும் மாநகரசபை, நகர சபையாக தரமுயர்த்தப்பட்ட மர்மங்கள் என்ன? இவை மட்டுமின்றி தமிழ் பகுதிகளிலுள்ள உள்ளுராட்சி பிரதேச கட்டிடங்கள் சிறிதாகவும் ஏனைய பிரதேசங்களிலுள்ள கட்டிடங்கள் பல கோடி ரூபா பெறுமதி வாய்ந்த கட்டிடமாகவும் இருப்பதிலுள்ள மாயங்கள் என்ன? இத்தோடு ஆளனி அனுமதி வழங்கும் போது பாகுபாடு பார்த்து ஆளனி வழங்குவதும், நகர அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு இன விகிதாசாரத்திற்கு முரணானமுறையில் நிதிஓதுக்கீட்டைச் செய்வதும் இன்னும் பலவழிகளிலும் புறக்கணிக்கப்படுவதும் நல்லாட்சியா? அமைச்சு அதிகாரங்களை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இவ்விடயங்கள் தொடரக் கூடாது. இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதற்குச் சமனாகும்.

மத்தியஅரசைப் பொறுத்தவரையில் கொள்கைத் திட்டமிடலிலும், அமுலாக்களினதும் போதும் ஒருபக்கச் செயற்பாடு காரணமாகவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் நடந்தேறி வருகின்றன. இந்தவிடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல தமிழ் உள்ளுராட்சி சபைகள் பாதிக்கப்பட்டு இருப்பதோடு குறிப்பாக, வாகரை,வாழைச்சேனை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி,போன்ற உள்ளுராட்சி மன்றங்களின் பெரும்பான்மையான பகுதிகள் யுத்தப் பாதிப்பின் அடையாளங்களாகவே உள்ளன. இவ் உள்ளுராட்சி சபைகளுக்கான வேலைகளை முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் இச்சபைகளுக்கு நிதி வருமானம் போதாது.

எனவே மத்திய அரசு ஒரு விசேட திட்டங்களை தயாரித்து புதிய ஆளனி உருவாக்கம், வடிகாலமைப்பு, வீதிகள் புனரமைப்பு, புதிய கல்வெட்டுக்கள் உருவாக்கல், மின்சார ஒழுங்குகள், குடிநீர் வழங்கல்,பாலர் பாடசாலை முறையாகச் செயற்படுத்துதல், கட்டிடத்திற்கான அனுமதி பெறல் போன்ற வேலைகளைச் செய்வதற்கு நிதிஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திறமையான பிரதிநிதிகள், செயலாளர்கள் இருந்தும் கூட பலனற்றுப்போகும். இவ்விடயத்தில் பல ஆரோக்கியமான விமர்சனங்களை மத்திய அரசு, மாகாண அரசு ஏற்க வேண்டுமென தெரிவிப்பதோடு இவ் உள்ளுராட்சி சபைகளில் பல இனமக்கள் வாழ்வதால் (ஒரிரு சபைகளைத் தவிர) தங்களுடைய சபையில் வீகிதாசார அடிப்படையில் நிதியை ஒதுக்கீடு செய்ய மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.