செங்காலன் கதிர்வேலர் சித்திரத்தேரில்

செங்காலன் கதிர்வேலர் சித்திரத்தேரில் சனியன்று பவனி ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இன்று சனிக்கிழமை கதிர்வேலர் சித்திரத்தேரிலேறி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வரும் மகோற்சவத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கதிர்வேலர் சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து காட்சியளித்தார்.

இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு அபிசேகம், வசந்தமண்டபப்பூசைகள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கடந்த வருடம் புதிதாக வடிவமைக்கப்பட்ட சித்திரத்தேரில் கதிர்வேலர் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

பெரும் எண்ணிக்கையானோர் காவடி எடுத்தும், அங்கப்பிரதட்தட்சணம் செய்தும், அடிஅழித்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர்.

தேர் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆலயத்தலைவர் வே.கணேசகுமார் தலைமையினாலான நிர்வாகத்தினரும் பரிபாலனகுழுவினரும் இளம் தொண்டர்களும் சிறப்புற செய்தனர்.

தாகசாந்தி நிலையங்களும், வர்த்தக நிறுவனங்களின் அங்காடிகளும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ளன.  தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதி கருதி விசேட ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.

மகோற்சவகாலத்தில் புதன்கிழமை மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கதிர்வேலர் வள்ளி, தெய்வானை சமேதராக மாம்பழ வடிவிலான அலங்காரத்துடனும் சிவன் பார்வதி சகிதமாகவும் பிள்ளையார் தனியாகவும் வலம் வந்தனர்.

மாம்பழம் பகிர்ந்தளிக்கும் விழாவான மாம்பழத்திருவிழா தத்துவரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிவனிடம் மாம்பழத்தைப் பெறுவதற்காக கதிர்வேலர் எல்லா இடமும் சுற்றி வருவதற்குள் பிள்ளையார் சிவன் பார்வதியை வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொள்ளும் காட்சி பார்க்க சிறப்பாக இருந்தது.

இந்த விழாவின் தத்துவவிளக்கம் அங்கு வழங்கப்பட்டது. இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் மாம்பழம் வழங்கப்பட்டது.
மறுநாளான வியாழக்கிழமை வேட்டைத்திருவிழா வெளிவீதியில் சிறப்பாக இடம்பெற்றது. வேட்டைத்திருவிழாவின் வரலாற்றுக் கதைகளை சிவநெறிச்செல்வர், சைவசித்தாந்தஜோதி, சைவசித்தாந்த சிரோன்மணி ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் விளக்கமாக எடுத்துக்கூறினார். எட்டுக்குடி என அழைக்கப்படும் முருகனின் வேட்டையை தத்துவரூபக் காட்சியாகக் காண்பிக்கப்பட்டது.

ஆலய நிகழ்ச்சிகளை பக்தர்கள் எங்கிருந்தாலும் பார்க்க வசதியாக youtube ஊடாக நேரடியாக திருவிழா நிகழ்வுகள் அஞ்சல் செய்யப்பட்டு வருகிறது.