எந்த பாடசாலை சமூகத்திற்காக தன்னுடைய கதவினை திறந்து விட்டிருக்கின்றதோ, அந்த பாடசாலையே எதிர்காலத்தில்  வெற்றிகரமான பாடசாலையாக மிளிரும்

எந்த பாடசாலை சமூகத்திற்காக தன்னுடைய கதவினை திறந்து விட்டிருக்கின்றதோ, அந்த பாடசாலையே எதிர்காலத்தில்  வெற்றிகரமான பாடசாலையாக மிளிரும் என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

மண்டூர் மகா வித்தியாலய கல்வி மேம்பாட்டு ஒன்றியம் நடாத்திய போட்டோ பிரதி இயந்திரம் கையளித்தலும் சாதனையாளர் பாராட்டு விழாவும் அதன் தலைவர் கே.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலாநிதி எஸ்.தில்லைநாதன், உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.நடராசதுரை, வித்தியாலய அதிபர் எஸ்.சிறிதரன்,சைவப்புலவர் எம்.சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  கல்வி என்பது அழியாத செல்வமாகும் அதனால்தான் எல்லா மதங்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து நிற்கின்றது. இந்து சமயத்தினைப் பொறுத்தளவில் கல்விச் செல்வம் வேண்டி கல்வி தெய்வம் சரஸ்வதியை வழிபடுகின்றனர். இவ்வாறு ஏனைய மதங்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து நிற்கின்றது. உதாரணமாக  இஸ்லாம் மதத்திலே நபிகள் நாயகம் அவர்கள் கூறுகின்றார். நீ கல்வி கற்பவனாக இரு! அல்லது கல்வி கற்பிப்பவனாக இரு அல்லது கல்விக்கு உதவி செய்பவனாக இரு! என்று கூறியிருக்கின்றார். அந்த வகையில் சமூகங்கள் பாடசாலைகளுக்கு உதவி செய்கின்றவர்களாக இருக்கவேண்டும் அந்த வரிசையில்தான் இந்த மண்டூர் கல்வி மேம்பாட்டு மையம் கல்விக்கு உதவிசெய்யும் வரிசையில் சிறந்து விளங்குகின்றது.

பாடசாலைகளின் தேவைகள் அனைத்தையும் வலயக்கல்வி அலுவலகமோ, மாகாண கல்வி அலுவலகமோ, கல்வி அமைச்சோ முழுமையா நிவர்த்தி செய்ய முடியாது. அதன் அடிப்படையில்  இயன்றளவு அனைத்தையும் நிவர்த்தி செய்ய நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம். பாடசாலை என்பது சமூகத்திற்காகவும் சமூகம் பாடசாலைக்காகவும் இருக்க வேண்டும.; எந்த பாடசாலை சமூகத்திற்காக தன்னுடைய கதவினை திறந்து விட்டிருக்கின்றதோ, அந்த பாடசாலையே எதிர்காலத்தில் மிகவும் சிறந்த வெற்றிகரமான பாடசாலையாக மிளிர்கின்றது.

  நாங்கள் அண்மையில் பிலிப்பைன்ஸ்  நாட்டிற்கு சென்றிருந்தோம் அங்குள்ள பாடசாலைகளின் கட்டமைப்பை பார்க்கின்றபோது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதனை நாங்கள் அவதானித்தோம். சமூகமானது பாடசாலையை தத்தெடுத்திருக்கின்றது. அவ்வாறு மிகவும் கூடுதலான பங்களிப்புக்களை சமூம் பாடசாலைக்கு வழங்கி பாடசாலைவளர்ச்சிக்கு துணைநிற்கின்றது.

 மண்டூர் என்பது மிகவும் பழமை வாய்ந்த கிராமமாகும். இந்த கிராமத்தை பற்றிய பல வரலாற்றுகுறிப்புக்கள் பல இடங்களில் காணப்படுகின்றது. அது மாத்திரமல்ல இந்த கிராமத்தில் இருந்து பண்டிதர்கள், புலவர்கள், கவிஞர்கள்,  வைத்தியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலதரப்பட்டவர்கள் காணப்படுகின்றனர். அவர்களை உருவாக்கிய பெருமை இப்பாடசாலைக்கு உண்டு அவ்வாறான பாடசாலையை வளர்த்தெடுக்கவேண்டியது காலத்தின் தேவையாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்…..பழுகாமம் நிருபர்