மனித பாவனைக்குதவாத டின்மீன் இறக்குமதி அதிகாரிகளின் கவனயீனம்

மனித பாவனைக்குதவாத உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அடிக்கடி தகவல்கள் கிடைக்கின்றன. இறக்குமதியாளர்கள் தங்கள் இலாபங்களை மாத்திரமே அடிப்படையாக கொண்டு தரக்குறைவான பொருட்களை இறக் குமதி செய்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய உரிய அதிகாரிகள் கவனக்குறைவாகவும் மேலும் கால தாமதமாக செயற்படுவதினாலுமே இவ்வாறான உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன.

அண்மையில் மனித பாவனைக்குதவாத டின்மீன்கள் ஒரு தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவை சந்தைக்கு வந்துள்ளதாகவும் ஊடகங்களின் வாயிலாக அறியக்கிடைத்தது. இவை உணவு தரக்கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்படாமல் சந்தைக்கு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையும் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தது. ஆயி னும் அதனை சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனை பிரிவு மறுத்திருந்தது.

இவ்வாறான குழப்பகரமான நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத் தியர் லக்ஷ்மன் கம்லத் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட டின்மீன்கள் மனிதபாவனைக்குதவாதவை என்பதால் அவற்றை மீண்டும் உரிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மனிதபாவனைக்குதவாத டின்மீன்கள் சீனாவிலிருந்து  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக எமக்கு அறியக்கிடைத்தது. இதனால் இவ்வாறான தகவல் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து உடனடியாக டின்மீன் கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்றாமல் தடுத்து நிறுத்துமாறு சுங்க திணைக் களத்திற்கு சுகாதார அமைச்சினூடாக உத்தரவிடப்பட்டது.

இதன்பின்னர் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பரிசோதனை அதிகாரிகளினால் 171 கொள்கலன்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இப்பரிசோதனையின் போது 108  கொள்கலன்களில் மனிதபாவனைக்குதவாத டின்மீன்கள் காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதை கவனத்தில் கொண்டு இந்த கொள்கலன்களை மீண்டும் சீனாவுக்கே திருப்பியனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான விசேட பரிசோதனை களுக்குட்படுத்தப்படாமல் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்ட டின்மீன்களை குறித்த தரக்கட்டுப்பாட்டு இலக்கத்தை அடிப் படையாக வைத்து இனங்கண்டு, மீண்டும் அவற்றை திரும்ப பெற்றுக்கொள்வதற்கான  நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளது என்றார்.

அதேபோல் இது குறித்து சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவிக்கையில்,

மனித பாவனைக்குதவாத உணவு பொருட்கள் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை சீனா, தாய்லாந்து மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்களங்கிய 137,000 கிலோ நிறை யுடைய 74 கொள்கலன் அடையாளங் காணப்பட்டு சுங்க கொள்கலன் தரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள் ளது. இவற்றில் 388 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் காணப்படுகின்றன.

ஒரு நாளைக்கு 100க்கும் அதிகமான கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களுக்கு வருகின்றன. அவற்றில் உணவு பொருட்கள் தாங்கி வரும்  கொள்கலன்களை இலங்கை சுங்க பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் தரக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தும். அவற்றை தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகளுக்குட்படுத்திய பின்னரே நுகர்வோருக்காக சந்தைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் சுங்க பிரிவினரால் மேற்கொள்ளப்படும். இதன்போது தரச் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியாத கொள்கலன்கள் சுங்க பிரிவனரால் சீல் வைக்கப்படும்.

இவ்வாறு அண்மையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 74 கொள்கலன்கள் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் மனித பாவனைக்குதவாத பொருட்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து உள்ளக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாவனைக்குதவாத உணவு பொருட்களை திரும்பி அனுப்பல் மற்றும் அழித்தல் போன்ற நடவடிக்கைகளில் சுங்க பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை சுங்கத்தினூடாக பல்வேறுபட்ட பொருட்கள் கைமாறுகின்றன. இவற்றில் உணவுப் பொருட்களை தனித்தனியாக சுங்க பிரிவினால் முழுமூச்சாக பரிசோதனைக்குட்படுத்த இயலாது. எனவேதான், சுகாதார பிரிவு உணவு தரக் கட்டுப் பாட்டு அதிகாரிகளும் உணவு சுகாதார பரிசோதனை அதிகாரிகளும் உணவின் தரப் பரிசோதனைகளில் ஈடுபடுவர்.

இவ்வாறு இருக்கையில் அண்மையில் வெளியேற்றப்பட்ட டின்மீன்கள் மனிதபாவனைக்குதவாதவை என கூறப்பட்டு வந்தா லும் அவை உறுதிப்படுத்தப்படுமிடத்து அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித் தார்.

இவ்வாறான உயர் பதவிகளிலிருப்போரின் கருத்துக்களின் படி இலங்கை சந்தையில் மனிதபாவனைக்குதவாத உணவு பொருட்கள் நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றன என்பது மறைமுகமாக உறுதிப்படுத்தப்படுகின்றது. இவற்றை உண்ணும் மக்களும் போஷாக்கற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இவ்வாறான காலக்கட்டத்திலேயே உலக சுகாதார அமைப்பின் உபதலைவராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் பதவியேற்றுள்ளார். இலங்கையும் சிறந்த சுகாதாரம் காணப்படும் நாடுகளின் தரவரிசையில் உயர்த்தப்பட்டுள்ளது. இவ் வாறு இலங்கை முன்னோக்கி நகர்கையில் நாட்டுக்குள் தரக்குறைவான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படு வதும் சந்தைக்கு அனுப்பப்படுவதும் இலங்கையை சர்வதேச மத்தியில் போஷாக்கற்ற நாடாக அடையாளப்படுத்தும். நாட்டு மக்களின் போஷாக்கும் கேள்விக்குறியாக்கப்படும்.

எனவே உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் பிரபல இறக்குமதியாளர்களும் இலாபத்தை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படாமல் மனிதர்களின் போஷாக்குகள் குறித்தும் அவதானம் செலுத்தவேண்டும். இவற்றுடன் உரிய அதிகாரிகளும் அசமந்தமான போக்குடன் செயற்படாமல் விரைந்து செயற்படவேண்டும். மிக முக்கியமாக டின்மீன் விடயத்தில் சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளன மற்றும் இல்லை அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்ற மாறுபட்ட கருத்துக் கள் காணப்படுவதால் இவ்விடயம் குறித்து சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும் வரையில் டின் மீன் பாவனையின் போதும் பொது மக்களும் மிகவும் அவதானமாக செயற்படுவதும் சிறந்ததாகும்