இனிமேல் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் ஊடகவியாலாளர்கள் எவராலும் தாக்கப்படக் கூடாது .அரியநேத்திரன்

க. விஜயரெத்தினம்)
வடகிழக்கில் ஊடகப்பணி செய்யும் தமிழ் ஊடகவியலாளர்கள் இனிமேலும் தாக்கப்படக்கூடாது.சுதந்திரமாக ஊடகப்பணியை மேற்கொள்ளும் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படவேண்டும்.மாறாக அவர்களை துன்புறுத்தவோ அல்லது அவர்களை கடத்தி கொலை செய்யவோ கூடாது.கடந்த ஆட்சியில்படுகொலைகளைச் செய்தவர்கள், அதற்குச் சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இதுவரை அக்கொலைகள் தொடர்பில் எவ்வித நீதியும் இல்லாத நிலைமையே இங்கிருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்களினால்  ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 14 ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015ம் ஆண்டு இந்த ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக பதிவியேற்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசியற் தீர்வு, சிறையில் இருக்கின்ற அரசியற் கைதிகளின் விடுதலை, ஊடகவியலாளர்களுக்கான நீதி போன்ற பலவேறு விடயங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்த ஊடகவியலாளர்களின் மரணத்திற்கான நீதிகளும் வழங்கப்படாமல் கிடப்பிலேயே வைத்திருக்கின்ற அரசாங்கமாகவே இந்த அரசாங்கமும் இருந்து கொண்டிருக்கின்றது.

நாட்டுப்பற்றாளர் நடசேன் அவர்கள் ஓர் அரச சேவையாளர் என்ற ரீதியில், ஊடகவியலாளர் என்ற ரீதியிலும் பல்வேறு சேவைகளைச் செய்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன் ஆகியோருக்கு மிகப் பெரிய பங்கிருக்கின்றது. இதன் அடிப்படையில் தான் தமிழ்த் தேசியம் தொடர்பான செய்திகளை கட்டுரைகளை அவர் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதனைப் பொருத்துக் கொள்ள முடியாத அப்போதிருந்த மஹிந்தவின் அடிவருடிகளாக இருந்த ஒட்டுக் குழுவினால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலைகளைச் செய்தவர்கள், அதற்குச் சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இதுவரை அக்கொலைகள் தொடர்பில் எவ்வித நீதியும் இல்லாத நிலையில் தான் நாங்கள் இந்த 14வது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். தொடர்ச்சியாக நினைவுகூறுவது மாத்திரம் தான் இடம்பெறுகின்றதே தவிர எந்தவொரு நீதியும் இல்லாத நிலைமையே இங்கிருக்கின்றது.கடந்த ஆட்சியில் 46 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.அவர்களுக்கான நீதியோ விசாரணையையோ இன்னும் இடம்பெறவில்லை.நல்லாட்சி அரசாங்கம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரையும் நீதி பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்த நல்லாட்சி அரசாங்கம் இதற்கான நீதிகளை வழங்க வேண்டும். இனிமேல் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் ஊடகவியாலாளர்கள் எவராலும் தாக்கப்படக் கூடாது என்று தெரிவித்தார்.