போதைப்பொருள் பாவனைக்கு வருடாவருடம் 400 மில்லியன் ரூபா மட்டக்களப்பு மாவட்டத்தில் செலவு செய்கின்றார்கள்.

க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கும்,அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் புகைத்தல்,மதுபாவனையின் அபாயத்தை மாவட்டத்தில் உள்ள போதைப்பொருள் பாவனையாளர்கள் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும்.இதனைப் புரிந்துகொண்டு மாவட்டத்தை மதுபாவனையிலிருந்தும்,புகைத்தலிருந்தும் விடுதலை பெற்று ஆரோக்கியமான சமூகமாக மாற்றுவோம் என மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நவசிவாயம் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் சர்வதேச புகைத்தல் –  மது எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வானது இன்று (31) வியாழக்கிழமை மண்முனைப்பற்று பொது சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.

மண்முனைப்பற்று சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

“புகைத்தலின் அபாயத்தினை ஒழித்து, வறுமை நிலையினை குறைத்து, அபிவிருத்தியினை மேம்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகமொன்று பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கே.ரமேஸ்,பிரதேச  சபையின் கௌரவ தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் அவர்களும் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் பங்குபற்றியதுடன், நிகழ்வினை சமூக அபிவிருத்தி உதவியாளர் திரு.த.ரவி அவர்கள் நடாத்தியிருந்தார்.

இங்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து பேசுகையில்:- போதைப்பொருள் பாவனைக்கு வருடாவருடம் 400 மில்லியன் ரூபா மட்டக்களப்பு மாவட்டத்தில் செலவு செய்கின்றார்கள்.போதைக்காக செலவு செய்யும் பணத்தினை விட மாணவர்களின் கற்றல்,கற்பித்தலுக்கு செலவு செய்யும் பணம் குறைவாகவுள்ளது.போதைப்பொருள் பாவிக்கும் பெற்றோர்கள்,சகோதரர்கள் தங்களின் பிள்ளைகள்,சகோதரர்களின் கல்விக்கு போதைக்கு கொடுக்கும் பணத்தை செலவு செய்யுங்கள்.
இதனால் மட்டக்களப்பு மாவட்டம் போதைக்கு அதிக செலவு செய்யப்படுகின்றது.இதனை உணர்ந்து செயற்பட்டால் மாவட்டத்தின் வறுமையை ஒழித்து அபிவிருத்தியை முன்னேற்ற முடியும் எனத்தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கொடி பிரதேச செயலாளர் அவர்கட்கு அணிவிக்கப்பட்டதுடன், ஆணி மாதம் முழுவதும் இக் கொடி விற்பனை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.