இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டு சற்கரி ஜனாதிபதிக்கு கடிதம்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
கொழும்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே,

இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டு
நான் எனது நாட்டின் மீது கொண்டுள்ள பற்றும் பக்தியும் வேறு எவரினுடையதிலும் பார்க்க குறைந்ததல்ல. ஆகவே அதற்கு பங்கம் ஏற்படக் கூடிய வகையில் எதையும் பேசவோ, சொல்லவோ மாட்டேன். இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி சனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இன்று எமது நாடு மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் இருப்பது வேதனை தருகின்றது. இன்றைய நிலையை பார்க்கும்போது மிக விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புண்டு. எல்லோருக்கும் ஏற்புடையதான ஒரு தீர்வைப்பற்றி யோசிப்பது பெரிய கடினமான காரியமல்ல.1956ம் ஆண்டு அரசகருமமொழிச்சட்டம் அமுலுக்கு வந்தபோதுதான் இனப்பிரச்சினையும் முன்தள்ளப்பட்டது. அதேபோல்தான் இனப்பிரச்சினையும் தலைகாட்டி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நாட்டில் உள்ள பல்வேறு இன, மத பிரிவினரின் ஒற்றுமையும், அமைதியும் குலைந்துள்ளது. சுருங்கக் கூறின் இன்று நம் நாடு இழந்து நிற்பது ஒற்றுமையும் அமைதிநிறைந்த வாழ்க்கையையுமே.
இந்த இக்கட்டான நிலையிலும் கூட சகல இன மக்களுக்கும் ஏற்புடையதான ஒரு தீர்வை தேடிப்பிடிக்க வேண்டிய கடப்பாடு அரசுனுடையதாகும். பல பொருத்தமான தீர்வு திட்டங்கள் எம்மைத்தேடி தாமாக வந்த போதெல்லாம் அவற்றை உதாசீனம் செய்து விட்டோம். அவ்வாறு தேடிவந்த திட்டங்களில் 2004ம் ஆண்டு வந்த திட்டமே பொருத்தமானது என பலதடைவைகள் நான் கூறி வந்துள்ளேன். ஆனால் துரதிஸ்டவசமாக சில தமிழ் தலைவர்கள் முறையற்று கையாண்டமையால் தேடிவந்த அந்த வாய்ப்பையும் இழந்துவிட்டோம். அத்தீர்வை நாம் ஏற்கத் தவறியமையால் அடைந்த நஸ்டம் பல. பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள், பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிப்போராளிகள் மற்றும் அரசபடையினர், பலகோடிபெறுமதியான தனியார் மற்றும் அரச சொத்துகளையும் பெருமளவில் இழந்துள்ளோம்.
2005 ஆம் ஆண்டு நடந்தேறிய ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் அனைவரையும் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் உள்ளது போன்று ஓர் சாசனத்தை சமஸ்டிக்குப் பதிலாக ஏற்க வேண்டும் என கோரியிருந்தேன். எனது பிரேரனை 2004ஆம் ஆண்டு பல்வேறு மட்டத்தில் ஆராயப்பட்டது. எனது தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி குழு ஒன்று தங்களை தங்கள் கட்சி காரியாலயத்தில் சந்தித்தது. அப்போது நீங்கள் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளராக இருந்தீர்களென எண்ணுகின்றேன். உங்களுடன் கௌரவ நிமால் சிரிபால டி சில்வாவும் அருகில் இருந்து கலந்துரையாடினார். இந்திய அரசியல் சாசனத்துடன் தென் ஆபிரிக்காவின் அரசியல் சாசனத்தில் இருந்த உரிமைகள் பற்றிய பகுதிகளையும் சேர்த்துக்கொள்வோம் என ஆலோசனைகளை கூறியிருந்தோம். இந்த விடயத்தை இலண்டனில் உள்ள சிங்கள சகோதரர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். அவர்கள் போன்று நீங்களும் அதற்கு மாறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை.
இலண்டனில் சந்தித்த சிங்கள சகோதரர்கள் காட்டிய உற்சாகம்தான் என்னை உங்களை சந்திக்கத் தூண்டியது. உங்களுடைய சந்திப்பும் அதே போன்று உற்சாகத்தைக் கொடுத்தது. நான் பல தலைவர்களை சந்தித்தேன். அவர்களில் சிலரின் பெயரை குறிப்பிட விரும்புகின்றேன் கௌரவ கரு ஜெயசூரிய, கௌரவ ஜி.எல் பீரிஸ், கௌரவ மாலிக் சமர விக்ரம, கௌரவ ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை மற்றும் கௌரவ டாக்டர் ஜெயலத் ஜயவர்தன ஆகியோர். மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேசினேன். சமயோசிதமாக முன்னாள் பாதுபாப்பு செயலாளர் கோத்தபாயவுடன் இதுபற்றி பேசியபோது அவரும் ஆதரித்ததாகவே தோன்றியது. முன்னாள் ஜனாதிபதி அவர்கள் சமஸ்டி என்ற வார்த்தையை பிரயோகிக்காது இந்திய மாதிரியான பதத்தை உங்கள் கட்டுரைகள் கடிதங்களில் இஸ்டம் போல குறிப்பிடுங்கள் என்று கூறியிருந்தார். கோல்பேஸ் மைதானத்தில் 2007ம் ஆண்டு சுதந்திர தின உரையில், நாம் உண்மையாகவும், நீதியாகவும் செயற்பட வேண்டுமானால் திரு. ஆனந்தசங்கரி போன்றோர் கேட்பதையாவது கொடுக்கவேண்டாமா? எனக் குறிப்பிட்டார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கௌரவ மகிந்த ராஜபக்ச 50;.29 சதவீத வாக்குகளையும், சமஸ்டி முறையிலான தீர்வை வைப்பதாக கூறிய கௌரவ ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் 48.43 சதவீத வாக்ககளையும் பெற்றனர். வெற்றியீட்டியவரிலும் பார்க்க தோல்வியுற்றவர் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்து எழுநூற்றி எண்பத்தாறு வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கேட்டமையால் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்களும் வாக்களித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருப்பார். சமஸ்டியை தீர்வாக வைத்த வேட்பாளரை தோற்கடித்தமைக்கு முழுப்பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்.
ஜனாதிபதி அவர்களே இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான தீர்வை நியாயப்படுத்த பல ஆதாரங்களை என்னால் தர முடியும். இந்தக் கடிதம் நீண்டுகொண்டே போகும் என்பதால் அவைகளை வெளியிடவில்லை. சரியாக கையாளுவீர்களேயானால் இந்திய அரசியல் முறைமையை பலர் ஆதரிப்பார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தவறான நிலப்பாட்டை எடுத்திருக்காது. மேலும் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதியாக ஏற்று ஜனநாயகத்தின் பாரம்பரியத்தை கட்டிக் காத்த நாடாகும். எனது ஆலோசனை ஏற்கப்பட்டால் பாக்கு நீரிணைக்கு அப்பால் உள்ள ஆறு கோடி தமிழ் மக்களும் பாராட்டி வரவேற்பார்கள்.
இந்த விடயத்தில் தாங்கள் முக்கிய கவனம் எடுத்து செயற்படுத்துவீர்களேயானால், அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இனப்பிரச்சிகை;கு ஒரு சரியான தீர்வை சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் பெற்றுக் கொண்டு, இந்த நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரையும் சுபீட்சமாக வாழ வைக்க முடியும்; என நான் எண்ணுகின்றேன்.
நன்றி
அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி