றவூப் ஹக்கீம் ஆதரவாளர்கள் அமீரலியுடன் இணைவு

வாழைச்சேனைப் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நேற்று செவ்வாய்கிழமை மாலை இணைந்து கொண்டுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து இணைந்துள்ளனர்.

இதன்போது கல்குடாத் தொகுதியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் ஏ.எல்.எம்.லியாப்தீன், கட்சியின் போராளிகள் மற்றும் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் தலைவர் கலந்தர் பாவா உள்ளிட்ட பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

கல்குடாத் தொகுதியில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள், அரசியல் நடவடிக்கைகளின் பாரிய முன்னேற்றங்கள் காணப்படுவதுடன், கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் நலனின் அக்கறை கொண்டு செயற்படுவதை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கல்குடாத் தொகுதியில் இருந்து ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும், கல்குடாத் தொகுதியை திறம்பட முன்னேற்றிச் செல்வதற்கும் பிரதியமைச்சருடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன் மற்றும் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும், முஸ்லிம் மக்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் இவரது கட்சியுடன் இணைந்து கொள்வதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாகவும் மேலும் தெரிவித்தனர்.