அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும்

சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது.

மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.
இந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம்,
இல 153/3.யூனியன் பிளேஸ்,
கொழும்பு-02.
Operation Office,
Hindu Federation Of Srilanka,
No.153/1 Union Place,
Colombo -02
Contact no.0774936997, 0773380835.
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ் மண்ணில் மறவன்புலவு க. சச்சிதானந்தந்தின் தலைமையில் நடைபெற்ற பசுவதைக்கு எதிரான உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கடும் எதிர்மறையான விமர்சனக்களம் தொடர்பாகவும் இந்து சம்மேளனத்தின் தேசிய சபை கூடி ஆராய்ந்து பின்வரும் கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்கின்றது.
இலங்கை வரலாறு முழுவம் இந்துக்களும் பௌத்தர்களும் தத்தமது உண்மையான பாரம்பரிய வரலாற்று மரபுவழிவந்த சுவடுகளையும் பெருமைகளையும் பதிவுசெய்து வந்துள்ளனர்.
அந்த வகையில் பௌத்தர்கள் இலங்கையை பௌத்த பூமியென்றும் இந்துக்கள் இலங்கையை சிவபூமியென்றும் தங்களுக்கே உரிய ஆதாரங்களுடன் நிறுவி வந்துள்ளனர்.எனினும் இந்த நாட்டில் மற்றைய மதத்தினரும் இந்த நாட்டின் மரபுவழிவந்த கலாச்சாரங்களை அனுசரித்து தமது சமயங்களையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்கவோ பின்பற்றவோ பூரண சுதந்திரம் உண்டு.அந்த வகையில் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் ‘பசுக்களை பாதுகாப்போம்’ ,’இலங்கை மண் பௌத்த ,சைவ புண்ணிய பூமி’ என்ற கோசங்கள் இலங்கையானது மற்றைய சமயத்தவர்களுக்கானது அல்ல என்ற பொருள்பட கூறப்பட்டது அல்ல. இந்த மண்ணில் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான இருபெரும் கீழைத்தேய கலாச்சாரங்கள் உண்டு.அவை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மேற்குலக நாடுகளாலும் பல்வேறு உளவு அமைப்புக்களாலும் மோதவிடப்பட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.’இந்த நாட்டின் கலாச்சாரத்தை அனுசரித்து வாழ விருப்பமில்லாதவர்கள் எமது நாட்டைவிட்டு வெளியேறலாம்’என்று ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் அவர்களும் இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெடன்யாஹு அவர்களும் கூறியபோது மொத்த உலகமும் வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்? காரணம் உண்மைகள் என்றுமே உண்மைகளாகத்தான்தொடரும். அந்தவகையில் சச்சிதானந்தன் அவர்களுடைய கருத்துக்கள் ஒரு சமுதாய பண்பாட்டு கலாச்சாரத்தின் அக்கரையுடன் தொடர்புபட்டது.
அவரது கருத்துக்களை கண்ணியமாகவும் கருத்தியல் ரீதியாகவும் அனுகுவதைவிடுத்து கடும் அச்சுறுத்தும் வகையிலான விமர்சனங்களை சில தமிழ் அரசியல்வாதிகள் அடங்களாக வெவ்வேறு தனிநபர்களும் அமைப்புக்களும் வெளியிட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.எனவே நாம் பின்வரும் தீர்மானங்களை எமது உயர்பீடத்தின் அனுமதியுடன் நிறைவேற்றி வெளியிடுகின்றோம்.

தீர்மானம் -01
ஆறுமுகநாவலரின் அடிச்சுவட்டில் யாழ்பாண இந்துக்களின் அடையாளமாகவும் ஆன்மீகப் போராளியாகவும் உருவெடுத்துவரும் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்குதல்.
தீர்மானம் -02
வடக்கில் மட்டும் எமது அமைப்பைச்சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தன்னார்வதொண்டர்கள் இதுவரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களாகவுள்ளனர்.மறவன் புலவு க.சச்சிதானந்திற்கு எதிராக எந்தெந்த கட்சிகளைச்சேர்ந்த அரசியல் வாதிகள் பேசிவருகின்றனரோ அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களிற்கும் எதிரானவர்களாகக் கருதி அவர்களுக்கெதிராக எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அவர்களைத் தோற்கடித்து இந்து வாக்குவங்கியின் சக்தியை வெளிப்படுத்துவதென்றும் அதற்கு எமது பயிற்சிபெற்ற தொண்டர்களை பயன்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்-03
மறவன் புலவு க.சச்சிதானந்தத்திற்கு எதிரான மிகமோசமாகவும் நாகரீகத்திற்கு ஒவ்வாத வகையிலும் விமர்சனங்களை வெளியிடும் தனிநபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்களது பின்னணி பற்றி ஆராயுமாறு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கும் நாசகார செயற்பாடுகள் தடுப்பு பிரிவிற்கும் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகின்றது.
தீர்மானம் -04
மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தீங்கிழைக்கப்படுமானால் அவ்வாறானதொரு விடயத்திற்கு தூண்டியவர்களாக அல்லது அமைதியான சமூகச்சூழலில் நாசகார சக்திகளை தூண்டிவிட்டவர்களாகவோ மற்றும் தேவையற்ற வகையில் வன்முறையான சொற்களை பயன்படுத்தியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு சந்தேக வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டு வழக்கு பதியப்படும் என்பதுவும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு இவற்றை அமுல்படுத்துவதற்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை தேசிய செயற்குழு வழங்குகின்றது.
தேசிய அமைப்பாளர், கௌரவ.பொன் சந்திரபோஸ்.
தேசிய ஆலோசகர், கௌரவ .இராசையா செல்லையா
பொதுச்செயலாளர், கௌரவ.எஸ்.பாலசுப்ரமணியம்
தலைவர், கௌரவ.நாரா.அருண்காந்த்
ஊடகப் பிரிவு, இந்து சம்மேளனம், இலங்கை.