கிழக்கு மாகாணத்தில் தமிழ்கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் முதலமைச்சர் பதவி பறிபோகும்

தமிழ்க் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழர்களுக்கான கணிசமான பிரதிநிதித்துவம் இல்லாமலொழிக்கப்படும் என்பதை தமிழர்களின் நலன் காக்கும் சக்திகள் மறந்து விடக் கூடாது. என மட்டக்களப்பு ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று(23) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம்; தெரிவித்தார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில்; மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் நாற்பது வீதம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் மாகாணசபைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களில் 20-இருந்து25வீதத்திற்குட்பட்ட அளவிலேயே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழர்களுக்கான கணிசமான பிரதிநிதித்துவம் இல்லாமலொழிக்கப்படும் என்பதை தமிழர்களின் நலன் காக்கும் சக்திகள் மறந்து விடக் கூடாது.
நடந்து முடிந்த உள்ள+ராட்சி தேர்தலில் பல இடங்களில் தனி தமிழ் பகுதிகளைத் தவிர ஏனைய சில இடங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போன விடயம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியாமல் இருப்பதென்பதே அத் தலைமைகளின் பலவீனத்தை காட்டுகின்றன.இந்தநிலையில் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க்கட்சிகள் பிரிந்து நிற்பார்களேயானால், குறிப்பாக, திருகோணமலை, அம்பாறை, மாவட்டங்களில் மூன்று மாகாணசபைபிரதிநிதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்று மாகாணசபை பிரதிநிதிகளை இல்லாமலொழிக்கப்படும். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்க் கட்சிகள் பல கொள்கைகளை உடையதாக செயற்பட்டு வருவது நாம் அறிந்த விடயமே.

குறிப்பாக தேசியமட்டத்தில் தேசியக்கட்சிகள் எதிரும்புதிருமாக இரண்டு பிரிவுகளாக உள்ளன.

இவ்விரண்டு பிரிவுகளுடன் இரண்டு பிரிவுகளாக தமிழ்கட்சிகளும் செயற்படுவதோடு, அதிகாரப்பங்கீடு தொடர்பாகவும் வடகிழக்கு இணைப்பு தொடர்பாகவும் ஏனைய சில விடயங்களில் கொள்கை ரீதியாக முரண்பட்டு தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை. திருந்தாதவர்களுடன் ஒன்று சேரத் தயார் இல்லை என்று சொல்லுகின்ற அளவுற்கும் பிரிந்து போனால் போதும் ஒன்று சேரத் தயார் இல்லை கட்சி நலமே எமது நலம் எனும் விடாப்பிடியில் கிழக்கு மாகாணத்திலுள்ள சில கட்சிகள் இருந்து வருவதும் தங்களது கட்சிக் குழப்பம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதிநிதித்தவத்தை இல்லாமல் செய்கின்ற அளவிற்கு தமிழ்த் தலைமைகள் செயற்படக் கூடாது. அப்படி செயல்பட முயற்சிப்பார்களேயானால் கிழக்கு மாகாணத்தில் எதிர் வருகின்ற காலங்களில் ஒற்றுமையை வலியுறுத்தியதான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இது பலதரப்பட்ட புதிய வியுகங்களை தோற்றுவிக்கும்.

எனவே தமிழ்த் தலைமைகள் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கின்ற செயல் திட்டங்களில் ஈடுபடுமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் எடுக்கின்ற எல்லா முடிவுகளும் வடமாகாணத்திற்கு சரிவராது. அதேபோல் வடமாகாணத்தில் எடுக்கின்ற எல்ல முடிவுகளும் கிழக்கு மாகாணத்திற்கு சரிவராது என்பதை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்குமாண தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருவதனாலும் அரசியல் ரீதியான அதிகாரங்களை அமுல்படுத்த முடியாமலும் பலபொருளாதார பின்னடைவுகளை சந்தித்து உள்ளனர்.
அரசியல்ரீதியாகவும், நிருவாகரீதியாகவும், அதிகாரப்பலத்துடனும் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாற்பது வீதமாக உள்ள தமிழர்கள் முதலமைச்சர் ஒருவரை தமிழரே வரவேண்டும் என்னும் பேரவாவில் எமது சமூகம் உள்ளன.
இந்த குறிக்கோளை அடைவதற்கு வடக்கில் முரண்பட்டால் அது தமிழர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடே. கிழக்கில் முரண்பட்டால் அது தமிழர்களுக்குள் வெகுவாகப் பாதிக்கும். இதனால் தமிழ்க்கட்சிகள் முரண்படக்கூடாது. தேர்தல்கூட்டு அவசியமாகும். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கென தமிழர் ஒருவர் முதலமைச்சர் இல்லாமல் போனால் தமிழ் தலைமைகளே பொறுப்புக் கூறுவதோடு, தமிழர்களுக்கு ஒரு வரலாற்றுத் துரோகத்தை செய்தவர்களாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பறைசாற்றப்படும். என்றார்.