வீதி அபிவிருத்தியில் வாழைச்சேனை மக்களின் கனவு நிறைவேறுமா?

வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்குச் செல்லும் பிரதான வீதியை பதினொரு மீட்டருக்கு அகலமாக்கி இரு வழிப்பாதையாக அமைத்து தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்குச் செல்லும் பிரதான வீதி புனரமைப்புக்காக கடந்த வருடம் 2017.08.13ம் திகதி நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஐந்து கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் போது அவ் வீதி இரு வழி போக்குவரத்திற்காக பதினைந்து மீற்றர் அகலம் கொண்டதாக அமையப் பெரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வீதியை அகலப்படுத்தும் போது அதிகமான பொது மக்களின் வீட்டு மதில்கள் வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்படுவதால் பதினொரு மீற்றர் கொண்டதாக அமையப்பெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கேற்ப பொது மக்கள் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய தங்களது வீட்டு மதில்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலை மதில்கள், பள்ளிவாயல்களின் மதில்கள் என்பன உடைத்து கொடுத்திருந்தனர்.

இதேவேளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெற்ற வடிகான்கள் அனைத்தும் வீதி விஸ்தரிப்புக்காக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவ் வடிகான்கள் தோண்டப்பட்டு வருகின்றது.

இச் சந்தர்ப்பத்தில் வீதி புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட பணம் போதாது என்ற காரணத்தினால் ஏழு மீற்றர் அகலத்தில் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. எங்களுக்கு இந்த வீதி வேண்டாம் வீதி விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது சொத்துக்களை இழந்து வீட்டு மதில்களையும், வர்த்தக நிலையங்களையும் உடைத்துக் கொடுத்தோம் அதனால் எங்களுக்கு அதிகாரிகள் சொன்னது போன்று பதினொரு மீற்றர் அகலம் கொண்டதாக வீதியை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றர்.

இவ் வீதி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சொல்லப்பட்டு வந்ததே தவிர எவ்வித அபிவிருத்தியும் அடையவில்லை நகர திட்டமிடல் அமைச்சின் மூலம் நடைபெறும் இவ் அபிவிருத்தி வேலையிலாவது மக்கள் எதிர்பார்த்த வீதி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

இவ் வீதியால் தான் கொழும்பில் இருந்து பாசிக்குடாவிற்கும், வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திற்கும் செல்லும் பிரதான வீதி என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாசிக்குடாவிற்கு செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு கூகுள் இணையத்தளத்தின் மூலம் இலகுவான பாதையாக இதனை காட்டுவதால் அதிக உல்லாச பயணிகள் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்குச் செல்லும் பிரதான வீதியை பதினொரு மீற்றர் அகலம் கொண்ட அமைக்கும் பயணத்தில் பொதுமக்கள், பாடசாலைகள் மற்றும் பள்ளிவாயல்களின் பல சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலரது சொந்த விரும்பங்களுக்கு ஆதரவாக குறித்த வீதி ஏழு மீற்றர் அகலம் கொண்ட அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதி விஸ்தரிப்புக்கு தங்களது சொத்துக்களை பொதுமக்கள், பாடசாலைகள், பள்ளிவாயல்கள் என்பன இழந்தது வீதியை பெரழதாக விஸ்தரிப்பதற்கு, ஆனால் சிலரது சொந்த விரும்பங்களுக்கு ஏற்ப மீண்டும் வீதியை குறைப்பதற்கு ஒருபோதும் நாங்கள் விடமாட்டோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்குச் செல்லும் பிரதான வீதியை பயணிகளின் நலன்கருதியும், வீதி விஸ்தரிப்புக்கு தங்களது சொத்துக்களை இழந்த மக்களின் விருப்பங்கள் கருதியும் வீதியை பதினொரு மீற்றர் அகலம் கொண்ட வீதியாக அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றர்.