வாகனேரிப் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு தேக்கு மரங்கள் கடத்தல் ஒருவர் கைது.

வாழைச்சேனை வாகனேரிப் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத தேக்கை மரங்களை ஏற்றி வந்த வாகனத்தை கைப்பற்றியதுடன், அதன் சாரதியினையும் சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது வாகனேரி பிரதான வீதியில் வைத்து குறித்த வாகனமும், தேக்க மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான குழுவினர்களின் நடவடிக்கையினால் பதினொரு தேக்கை மரங்கள் மற்றும் வாகனம், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மரங்கள் கடத்தப்படும் சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத மரங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.