“என்ன வாழ்க்கடா தம்பி எனக்கு 71வயதாகியும் ரணங்களுடன் வாழும் றாணமடு மாதிரிக்கிராம மக்கள்

செ.துஷ்யந்தன் (ஒரு நேரடி ரிப்போட்)
ரணங்களுடன் வாழும் றாணமடு மாதிரிக்கிராம மக்கள்
மண் பருக்கை போன்ற இந்த மனிதவாழ்கையில் நாம் மூச்சு விடுகின்ற இத் தருணமே நிதர்சனமாகும். மாடமாளிகையில் போலிக் கௌரவங்களுடன் போலி வாழ்க்கை வாழ்வதை விட மண் குடிசையில் மனநிறைவான வாழ்க்கை வாழ்வதே மேலாகும்.

இறைவனின் இயக்கத்தை எதிர்வு கூரும் ஆற்றல் மனிதனுக்கோ¸ மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள நவின கருவிகளுக்கோ இல்லை. ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.”;என்ற பகவத்கீதையை நினைவு படுத்தியவனாக துன்பங்களே தொடர்கதையாய் தொடரும் தமிழ் மக்கள் வாழும் கிராமங்களின் அவலமோ சொல்லிமாளாது.

அந்தவகையில்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ளது றாணமடு மாதிரிக்கிராமம் இங்கு 75இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடும் போர்சூழலில் தமது கிராமத்தை விட்டு அனைவரும் இடம்பெயர்ந்திருந்தனர்.

றாணமடு கிராம மக்களின் நலன் கருதி இங்கு 1980-07-22ம் திகதி அப்போதைய பிரதமந்திரி மறைந்த பிரமதாசாவினால் 20 வீடுகள் கட்டித் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அன்றைய பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி.கணேசலிங்கம் துணைநின்றுள்ளார்.
கிராம வாசியான பொ.சின்னத்தம்பி(71வயது) இப்படிக் கூருகின்றார்
“என்ன வாழ்க்கடா தம்பி எனக்கு 71வயதாகியும் இன்னும் கஸ்டப்படுறன் அந்தக்காலத்தில இருந்து இந்தக் காலம் வரையும் இந்தக் கிராமத்தில ஒரு வசதியுமில்ல. எங்கள மாதிரி ஆட்களுக்கு விவசாயம்தான் தெரியும். கூலிக்குத்தான் வேலை செய்யுறது. வயலுக்க குருவி பறவைகளை துரத்துறது. வரம்பு கொத்துறது எண்டுதான் வாழ்க்க போகுது. இப்ப வெட்டு மெசின் வந்த பிறகு வெள்ளாம வெட்டுறவேலையும் இல்லாமப் போயிட்டுது. இத்தின வருசமாகுது எங்கட கிராமமும் முன்னேறல்ல நாங்களும் அப்படியேதான் இருக்கிறம். தொழிலுக்கு ஏதாவது உதவி செய்யுங்க.” என்றார்.
இக்கிராமத்தில் தொழில் வாய்ப்பைத்தேடி வெளிநாடு சென்று இருப்பதையும் இழந்து நிர்கதியாய் திரியும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறான கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர்
இக்கிராமத்தில் நான்கு பொதுக் கிணறுகள் இருக்கின்ற போதிலும் கோடை காலத்தில் தண்ணீர் வற்றிவிடுவதினால் அக்காலங்களில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு மிகுந்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுவதாக சுட்டிக்காட்டுகினர். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்;நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாணவர் கல்விக்கு உதவுதல்
கிராமப்புறங்களில் வாழும் மக்களின் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். கிராமப்புறங்களில் மாணவர்கள் பெற்றோர் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் பரந்தளவில் விழிப்புணர்வு ஊட்டப்படவேண்டும்;. மாணவர்களுக்கு கற்றலுக்குரிய ஊக்கிகள் வழங்கப்படவேண்டும் “இங்கயிருந்து மூணு கிலோ மீற்றர் தூரம் நடந்து பள்ளிக்குப்போகவேணும். ரியூசன் வகுப்புக்கூட நடக்கிறல்ல. அப்பிடி போறது எண்டாலும் கனதூரம் போகவேணும். சைக்கிள் வாங்குறத்துக்கும் காசில்ல. இங்கயிருக்கிற படிக்கிற பிள்ளையலுக்கு சைக்கிள் வாங்கித்தந்தா நல்லாயிருக்கும்” என மாணவி கேமிகா கூறினார்.
தமிழ் சமூகம் இழந்தவற்றைப் பெறவேண்டுமாயின் அது கல்வி ஒன்றினாலே முடியும். ஒருகாலத்தில் நாட்டின் உயர்பதவிகளை அலங்கரித்தவர்கள் தமிழர்கள். இன்று வடக்கு கிழக்கிலே தமிழ் மாணவர்களின் விகிதாசாரம் குறைவடைந்து வருவதுடன் பாடசாலையை விட்டு இடைவிலகுபவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். கிராமப்புற மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் கல்விச் சமூகம் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
றாணமடுக்கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் கைகொடுக்குமா.?
வீதிப்பிரச்சினை
கடந்த கால யுத்தம் சிதைத்த அழிவுகளின் துயரங்களை, பதிவுகளை சுமந்தவர்களாகவே றாணமடுக்கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள வீதிகளும் அம்மக்களின் அவலத்தை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகின்றன. குன்றும் குழியுமான பாதையாக காட்சியளிக்கும் இக்கிராமத்து வீதிகளுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்.? இவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமா.?
வாழ்வாதாரத் தேவை
கஸ்டப்பிரதேசங்களில் மீள்குடியேறி கஸ்டப்படும் இவ்வாறான மக்களுக்கு வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். இப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் விவசாயம், வீட்டுதோட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதினால் அவைசார்ந்த தொழில் உதவிகள் வழங்கப்படவேண்டும்.
“இவரும் வெளியில அங்க எத்தின காலத்துக்கு கிடந்து உழைக்கிறது. சம்பளமும் ஒழுங்கா கொடுக்கிறதுமில்ல. நம்மட நாட்டுல வேலயிருந்தா ஏன் அவர் அங்ககிடந்து கஸ்டப்படவேணும். வாழுறது கொஞ்சக்காலம் தானே அதுக்குள்ள சந்தோசமா வாழவேணும். வாற அரசாங்கம் எல்லாம் சும்மா பொய் சொல்லி ஏமாத்துற வேலையத்தான் செய்யுதண்ணே” என வருத்தப்பட்டு சொன்னார் சாலினி.
இவரது கணவன் போன்று வெளிநாட்டு வேலை வாய்ப்பை நம்பி ஏமாந்து கஸ்டப்படும் இளைஞர்கள் பலர்இருக்கின்றனர். கூழோ, கஞ்சியோ குடித்து விட்டு நமது நாட்டிலே தொழில்புரியக் கூடிய வகையில் திட்டமிட்டு சிறந்த தொழில் வாய்ப்புக்களை அரசாங்கம் உருவாக்க முன்வரவேண்டும்
இந்நாட்டில் சீரழிந்து போய்கிடக்கும் தமிழ் மக்களின் வாழ்வில் வசந்த காலம் மீண்டும் மலராதா.? றாணமடு மாதிரிக்கிராம மக்களின் குறைகள் நிவர்த்திக்கப்படுமா.?