மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் அனைத்து  சுகாதார தொழிலாளர்கள் போராட்டத்தில்

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் அனைத்து  சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள் இன்று 26.05.2018 சனிக்கிழமை  ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடாத்தினர்.

ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையினைக்கண்டித்து நகர சபை முன்றலில் இந்த எதிர்ப்புப்போராட்டம் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

அமைய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படாமை, சீருடைகள் விநியோகிக்கப்படாமை,   பத்துமாதகால இடர்கடன் வழங்கப்படாமை மற்றும் செயலாளரும் நிதியுதவியாளரும் ஊழியர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதோடு  தகாத வார்த்தைப்பிரயோகம் செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.

இதன்போது நகர சபையின் முதல்வர் ஐ. அப்துல் வாசித் மற்றும் உப தவிசாளர் எம்எல். றெபுபாசம் ஆகியோர் அவ்விடத்திற்கு வருகைதந்து ஊழியர்களது கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் மகஜர் ஒன்றையும் கையேற்றனர். செயலாளரது நடவடிக்கைதொடர்பாக விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதமளித்ததுடன் பிரதேசத்தின் சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக வேலைக்குத்திரும்புமாறு  முதல்வர் கேட்டுக்கொண்டபோதிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடவில்லை.

இவ்விடயம் குறித்து ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலுடன் தொடர்பு கொண்டுகேட்டபோது- இக்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை எனத்தெரிவித்ததுடன் பத்தமாத இடர்கடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பங்களின் தொடர்அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகக் கூறினார். மேலும் நகர சபையில் நிலவும் நிதிப்பற்றாக்குறையினால் கொடுப்பனவுகளையும் சீருடைகளையும் உரிய காலத்தில் வழங்க முடியாதுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏறாவூர் நகரை சிறத்ததொரு பிரதேசமாக மாற்றும் தனது திட்டத்திற்கு எவரும் ஆதவளிக்காது  நகரசபையிலுள்ள பல ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்கூட தம்முடன் அடிக்கடி முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். எவ்வாறிருப்பினும் கடந்தகாலங்களில் நடைபெற்றதைப்போன்று  ஊழல்களுக்கும் அரசியல்வாதிகளது ஆட்டத்திற்கும்  நிருவாகரீதியில் தற்போதும் இடமளிக்க முடியாது என்றார்.