மிகவும் பின் தங்கிய கிராமத்திலிருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாவதற்கு எமது வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர்களே காரணமாகும்.

தேசிய கல்வியியற் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு

தொகுதியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 2018.05.23 – பிங்கிரிய

இந்த கல்வியியற் கல்லூரிக்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அபிவிருத்தி நடவடிக்கையின்போதும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கப்படும் போதும் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடுகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், தனது பிங்கிரிய தொகுதியினதும் குருணாகல் மாவட்டத்தினதும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடமும் பாராளுமன்றத்திலும் முன்வைத்திருந்தார். அவற்றுள் சில நிறைவேறியிருக்கும். சில நிறைவேறாமல் இருக்கலாம். கிராமங்களில் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் அமைப்புக்கள், பௌத்த சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களும் தமது கிராமங்களிலுள்ள பிரச்சினைகளான வீதி புனரமைப்பு, குடிநீர் வசதி, பாடசாலை கட்டிடங்களை நிர்மாணித்தல், மைதானம் அமைத்தல், பொது மயான பூமி அமைத்தல் தொடர்பாக பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். பல கடிதங்கள் அனுப்பியிருக்கலாம். சில வேளைகளில் போராட்டங்கள் செய்திருப்பர். அவை நிறைவேறியதன் பின்னர் தமது முயற்சியிலேயே அவற்றைப் பெற்றுக்கொண்டோம் என கூறிக்கொள்வர்.
ஆயினும் இன்று உங்களுக்கு கிடைத்துள்ள இந்த விடயம் அவ்வாறு கிடைக்கப்பெறவில்லை. மூன்று வாரங்களுக்கு முன்னர் நான் இங்கு வருகை தந்தபோது கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வந்திருப்பதாக கூறியதுடன், வெசாக் வைபவத்திற்கு தாமதமாகிய போதிலும் உங்களுடன் உரையாடி செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அப்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கேற்ப இந்தப் பணி நிறைவு செய்தமைக்காக கப்பற் படைத் தளபதி உள்ளிட்ட தொழில்நுட்ப பொறியியலாளர் படையணிக்கும், ஜனாதிபதி செயலகத்தின் சிறுநீரக நோய் நிவாரண நிதியத்தின் பணிப்பாளர் அசேல இந்தவெல ஆகியோருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஆசிரியர் கல்வியியற் கல்லூரிகள் தொடர்பான அனுபவமும் புரிந்துணர்வும் எனக்கு சிறுவயது முதலே உண்டு. ஏனெனில் எனது அம்மாவும் உங்களைப் போன்றே இவ்வாறு கல்வியியற் கல்லூரியில் கல்வி பயின்றவர் ஆவார்.
பொலன்னறுவையின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த நான் பாடசாலையில் ஐந்து மணித்தியாலங்கள் கழித்த போதும் மிகுதி நேரத்தை வீட்டிலேயே கழித்தேன். அது கூட ஒரு பாடசாலை போன்றதே எனக் கூறினால் மிகையாகாது. அந்த காலத்தில் இன்றுபோல் வசதிகள் இல்லை. எனது கிராமத்திற்கு இன்று நீங்கள் சென்றால் அங்கு செப்பனிடப்பட்ட வீதிகளையும் தொழிற்சாலைகளையும் பூங்கா, புகையிரத நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட குறைபாடுகளற்ற கிராமத்தை காணக்கூடியதாக இருக்கும். எனது சிறிய வயதில் நான் வளர்ந்த பின்தங்கிய கிராமத்திற்கு உங்களைப் போன்றே பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நியமனம் பெற்று வருகையில் பெரும்பாலும் அவர்கள் எமது இல்லத்தையே தங்களது தங்குமிடமாகக் கொண்டனர். எனது தாயாரும் ஆசிரியர் என்பதால் அதிபரும் எமது வீட்டில் குறைந்தது ஐந்து ஆசிரியர்களாவது தங்கியிருப்பார்கள். இதனால் எனது வீடும் எனக்கு ஒரு பாடசாலை போலவே அமைந்திருந்தது.
அக்காலத்தில் எமது ஊர் அவ்வளவு ஒழுங்காக இருக்கவில்லை. சாராயம், கள்ளு போன்றவை காணப்பட்டன. அத்கையதொரு கிராமத்தில் இருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாவதற்கு எமது வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர்களே காரணமாகும்.
உங்களது பணி தற்போது ஒரு தொழிலாக இனங் காணப்பட்ட போதிலும் அக்காலத்தில் அவ்வாறு கருதப்படவில்லை. சித்தார்த்த குமாரனின் பிறப்பும் ஒரு கற்கையே என்பதை நீங்கள் அறிவீர்கள். சித்தார்த்த குமாரனின் பிறப்பு முதல் அவர் பரிநிர்வாணம் அடைந்தது வரையான வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். அன்றைய பாரத சமூகத்தில் காணப்பட்ட கடினமான சமூகப் பின்னணியை நீங்கள் அறிவீர்கள். இயேசு பிரானை சிலுவையில் அறைந்த சமூகத்தின் நிலைமையை நீங்கள் அறிவீர்கள். எனவே சமூகத்தில் எல்லா காலத்திலும் நல்லவர்களும் இருந்தார்கள், கெட்டவர்களும் இருந்தார்கள். பகவத்கீதையிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு துறையிலும் பணிபுரியும் எந்தவொரு அரசியல்வாதியும் அரச உத்தியோகத்தர்களும் சமயத் தலைவர்களும் வர்த்தகர்களும் வெளிப்படுத்தும் முன் மாதிரியே அவர்களது சேவையின் பெறுமதியும் கௌரவமும் தங்கியுள்ளது. இந்த நாட்டின் கல்வி அமைச்சிற்கும் மாகாண சபைகளுக்கும் உரிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதுடன், இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள் என்பதை கல்வியமைச்சர் அறிவார். அண்மையில் ஆசிரியர் சேவையில் சுமார் எட்டு அல்லது ஒன்பது சதவீதமானோர் அந்த சேவைக்கு பொருத்தமானவர்கள் என அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் அவதானித்தேன். அதற்கு அவர்களது கல்விச் சான்றிதழில் உள்ள பிரச்சினையால் அல்ல. சேவையில் ஈடுபடும் போது பெற்றுக்கொள்ளும் ஆற்றல், திறமைகளே காரணமாகும். அந்த அறிக்கையை நான் வாசித்தேன். இது எமது நாட்டின் ஆசிரியர் சேவையில் மாத்திரம் காணப்படும் குறைபாடும் அல்ல. எமது நாட்டின் அரசியல்வாதிகளின் நிலைமையும் அதுவே. எமது நாட்டில் 14 இலட்சம் அரச சேவையாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த கணிப்பீட்டை மேற்கொண்டாலும் நிலைமை அவ்வாறே காணப்படும். இதனை நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். நான் எனது வாழ்க்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலதிக வகுப்புகளுக்கு சென்றதில்லை. எனது மாணவ பருவத்தில் ஆசிரியர்கள் அன்பு, கருணையோடு கற்பித்ததுடன், பாரா முகமாக இருந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. நான் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் கல்வி கற்ற போது எமக்கு பௌதீகவியல் கற்பித்த ஆசிரியர் ஒருவர் இருந்தார்.
வெவ்வேறு பாடவேளைகளில் மாணவர்கள் இரசாயனகூடம் போன்றவற்றிற்கு செல்வது வழக்கம் என்பதை நாம் அறிவோம் அல்லவா? பௌதீகவியல் பாடத்திற்கு சென்றதும் எமது ஆசிரியர் ”நீங்களா வந்துள்ளர்கள்? இங்குள்ள உங்களில் எவருமே ஒருபோதும் உருப்படப் போவதில்லை. சரி பாடத்தை ஆரம்பிப்போம்” என்றே அவர் கற்பிக்கத் தொடங்குவார். என்றோ ஒரு நாளைக்கு மாத்திரமே அவர் அவ்வாறு கூறாது இருப்பார். எவ்வளவு நன்றாக கற்பித்தாலும் அந்த சிறு வயதில் அவரது வார்த்தைகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். உங்களது கல்வியிற் கல்லூரி விரிவுரையாளர்கள் வகுப்பிற்கு வந்து அவ்வாறு கற்பிக்க ஆரம்பித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
ஆசிரியர் பணி என்பது நாட்டைக் கட்டியெழுப்பும் தொழிலாகும். நாட்டின் எதிர்காலம் அவர்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தொழிலுக்கும் பின்னடைவு அற்றது. அன்று முதல் இன்று வரை நிலவி வரும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பில் காணப்படும் பண்புத்தரம், சிறப்பு, அர்ப்பணிப்பு, மரியாதை என்பவற்றைப் போலவே ஆசிரியர்களால் மாணவர்களுக்கு இடம்பெறும் அநீதிகளையும் நாம் அறிகிறோம். சில பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பிரச்சினைகளை மாணவர்களிடம் கூறி அதற்கேற்ப அவர்களை நடந்துகொள்ளுமாறும் தமக்கு தேவையான பொருட்களைக் கொண்டு வருமாறும் கேட்கின்றனர். சிலவேளை மாணவர்களுக்கு அதனை நிறைவேற்ற முடியுமாக இருக்கலாம். சில வேளைகளில் முடியாதிருக்கலாம். ஒருவேளை மாணவர்கள் அவர்களை கூறியதை செய்யாதுவிடின் அவர்களுடன் வித்தியாசமாக நடந்துகொள்கின்றனர். இதுவே இன்றும் இந்நாட்டில் காணப்படும் நிலைமையாகும். எனக்கு மூன்று பிள்ளைகள். அவர்களும் என்னைப்போன்றே பொலன்னறுவையில் கல்வி கற்றார்கள். 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நான் போட்டியிட்ட கட்சி தோல்வியடைந்தது. இதனால் எனது பிள்ளைகளால் அந்த பாடசாலையில் கல்வி பயில இயலாத சூழல் உருவானது. மாணவர்கள் அல்ல ஆசிரியர்களே பலவாறு பேசத் தொடங்கினார்கள். ஒருபோதும் எனது பிள்ளைகளை கொழும்பில் உள்ள பாடசாலைகளில் சேர்க்க நான் விரும்பவில்லை. ஆயினும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகிய காரணத்தால் எனக்கு எனது பிள்ளைகளை கொழும்பிற்கு அழைத்து வர நேர்ந்தது.
மிகவும் தூரப் பிரதேசங்களில் இருந்து தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிள்ளைகளை கிராமத்து பாடசாலைகளிலிருந்து விலக்கி கொழும்புக்கு அழைத்து வருவார்கள். தொடர்ந்து வெற்றியடைந்தால் பரவாயில்லை. தோல்வி அடைந்தால் பிள்ளைகளே பாதிக்கப்படுவார்கள். நான் பெருமைக்காக கூறவில்லை. இதற்கு எதிரான திசையில் செயற்பட்ட ஒரேயொரு அரசியல்வாதி நானே. நான் 89 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானேன். மார்ச் மாதத்தில் பதவிப்பிரமாணம் செய்தேன். அப்போது இரண்டு மகள்மார் மாத்திரமே இருந்தனர். அவர்கள் எனது பெற்றோரின் கிராமத்திலுள்ள பிரபல பாடசாலையிலேயே கல்வி கற்றார்கள் நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானதும் அவர்களை அங்கிருந்து விலக்கி பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்த்தேன். இவ்வாறு எவரும் செயற்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை.
நாம் எமது சமூகத்திலுள்ள சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பாடசாலைக்கு சென்று பிள்ளைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டினைக் கட்டியெழுப்பும் வகையில் உங்கள் கடமைகளையும் பொறுப்புக்களையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
அதன்போது நன்றாக கல்வி கற்கும் திறமையான பிள்ளைகளுடன் மாத்திரமே நீங்கள் நெருங்கிச் செயற்படுவீர்களாயின் அதுவே நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறாகும். திறமையான மாணவர்கள் மட்டுமன்றி சகல பிள்ளைகளும் உங்கள் கவனத்திற்கு உட்படுதல் வேண்டும். அதுவே உங்கள் கடமையாகும் என்பதை தெரிவித்து விடைபெறுகின்றேன்.
நன்றி
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.05.24