ஊருக்கு ஒரு சட்டமா? ஊருக்கு ஒரு நீதியா? இதுதானா சமுக நல்லிணக்கம்? போட்டுடைத்தார்ஜெயசிறில்

இனரீதியாக சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயற்படுவதே சமுக நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளது!
சமுக நல்லிணக்ககூட்டத்தில் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்!
(காரைதீவு   சகா
 
சமுநல்லிணக்கம் அவசியமானது. ஆனால் இனரீதியாக சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயற்படுவதே சமுக நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளது. அதனை இனங்கண்டுகளைய வேண்டும்.
 
இவ்வாறு காரைதீவுப்பிரதேச சமுக நல்லிணக்ககூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
 
காரைதீவுப்பிரதேச நல்லிணக்கக்குழுவின் நல்லிணக்ககலந்துரையாடல்  திங்கட்கிழமை தலைவர் எஸ்.தங்கவேல் தலைமையில் பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
 
அங்கு காரைதீவு பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிதிகளும் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்;
அழிவுறும் நிலையிலிருக்கும் காரைதீவு மயானத்தைக் காப்பாற்றும்வகையில் நாம் எல்லையில் நடவடிக்கையை மேற்கொண்டால் ஒருநாளும் வராத சூழல்சுற்றாடல் அதிகார சபையினரும் பொலிசாரும் அருகிலுள்ள பிரதேசசபை பிரதிநிதியும் வந்து தலைப்போட்டு தடைபோடுகிறார்கள்.இதுதானா சமுக நல்லிணக்கம்? 
 
காரைதீவில் ஆலயமருகே மாட்டிறைச்சி எலும்புகள் வீசப்படுகின்றன. முறையிட்டோம். இந்த சுற்றாடல் சபை அந்தப்பக்கமும் வரவில்லை. இதூதானா சமுக நல்லிணக்கம்?
 
காரைதீவு கிறிஸ்தவ ஆலயம் முன்றலில் உள்ள எமது சபைக்குச்சொந்தமாக பஸ்தரிப்பு நிலையத்தை ஒருவர் முள்வேலி போட்டு அடைத்தது மட்டுமல்லாமல் தோண்டவும் ஆரம்பித்துள்ளார்.
 
நாம் சம்மாந்துறைப்பொலிசுக்கு 2 முறைப்பாடுகள் எழுத்துமூலம் சமர்ப்பித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதானா சமுக நல்லிணக்கம்?
3500ஏக்கர் வயல்நிலங்களின் வடிச்சல் அசுத்த நீர் வெட்டுவாய்காலுக்குள் நுழைகிறது.
 
நிந்தவூர்ப்பிரதேசத்திலிருந்து கானொன்றின்மூலம் வெட்டிவிடப்பட்ட அசுத்தநீரும் வெட்டுவாயக்காலுக்குள் நுழைகிறது. இரண்டும் அந்தப்பகுதியிலுள்ள தாவரங்களை அழிப்பதோடு நன்னீர் மீனினங்களையும் அழிக்கிறது. இதனை முறையிட்டால் வந்துபார்க்கிறார்களில்லை. இதுதானா சமுக நல்லிணக்கம்?
 
மன்னிக்கவேண்டும் இதனைச்சொல்வதற்கு.வெள்ளிக்கிழமைகளில் அல்லது பெருநாட்களில் இஸ்லாமிய சகோதரர்கள் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் பொலிசார் பிடிப்பதில்லை. ஆனால் தீபாவளிக்கோ புதுவருடத்திற்கோ ஆலயத்திற்கோ தமிழர் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் வரிந்துகட்டிக்கொண்டு பிடிக்கிறீர்கள். ஹெல்மெட் அவசியம். ஆனால் சட்டம் நீதி இவ்வாறு பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடுமா? இதுதானா சமுக நல்லிணக்கம்?
 
காரைதீவுபொலிஸ் நிலையம் ஒருமாத்திற்குமட்டும் என்றுதான் அமைத்தீர்கள். ஆனால் இன்று அது வருடமாகச்செல்கிறது. இது வந்ததன்பிறகுதான் குடியும் மாவோ என்கிற போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துள்ளது. அண்மையில் நடமாடும்சேவை நடாத்தினார்கள். பிரதேசசெயலாளருக்கோ தவிசாளருக்கோ எதுவுமே தெரியாது. ஏனிந்த பாகுபாடு?
 
இப்பிதேசத்தில் கடற்கரை பாதுகாப்புப்பிரதேசமாக 65மீற்றருள்ளது. காரைதீவுக்குள் அப்பிரதேசத்திற்குள் சிறுகட்டுகட்டினாலும் மறுநிமிடம் கரையோரப்பாதுகாப்புத்திணைக்களம் சுற்றாடல் அதிகாரசபை என்று வந்துவிடுவார்கள். ஆனால் அருகிலுள்ள முஸ்லிம் கிராமங்களில் அந்தப்பகுதிகளுள் நிரந்தரக்கட்டங்களைக் கட்டியுள்ளார்கள். இதைப்பற்றி மேற்சொன்ன தரப்பினர் அலட்டிக்கொள்வதில்லை. ஊருக்கு ஒரு சட்டமா? ஊருக்கு ஒரு நீதியா? இதுதானா சமுக நல்லிணக்கம்?
 
இவற்றைப்பற்றி அமைச்சர்களோ எமது எம்.பிக்களோ கவனமெடுப்பதில்லை.
 
சும்மா வெறுமனே மக்களை மாத்திரம் நல்லிணக்கமாக இருங்கள் என்று பெயருக்கு சொல்லிவைத்தால் மாத்திரம் போதாது. சட்டம் நீதியை அமுல்படுத்தும் அதிகாரிகள் நீதியாகச் செயற்படவேண்டும். இனமதபேதம் பார்க்கக்கூடாது.என்றார்.
மக்கள் பிரதிநதிகளும் தமது கருத்துக்களைக்கூறினர்.
மாவடிப்பள்ளி அதிபர் சைபுதீன் நன்றியுரையாற்றினார்.