தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் விரும்பினால் பொலிஸ் உத்தியோகத்திற்கு விண்ணப்பிக்கலாம்

பொலிஸார் பொதுமக்கள் உறவு பலமாக இருந்தால் குற்றச் செயல்களை தடுக்க முடியும் – மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுப்படிச்சேனை கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் புதன்கிழமை 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பீ.ரி.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொலிஸ் நடமாடும் சேவை நிலையத்தை திறந்துவைத்து பொதுமக்கள் சேவையினை ஆரம்பித்துவைத்தார்.

இந் நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தற்கொலைகள் அதிகரித்துள்ளது, அதிலும் இளம் வயதானோரே அதிகம் தற்கொலை செய்கின்றனர். இது தொடர்பில் பொலிஸ் நிலயங்கள் ஊடாக நாம் விழிப்புணர்வுகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

பொலிஸார் பொதுமக்கள் உறவு என்பது எப்போதும் பலமானதாக இருக்க வேண்டும், அவ்வாறு பலமானதாக இருந்தால் இங்கு நடைபெறும் குற்றச் செயல்களை தடுப்பது மிக இலகுவாக அமையும். நாம் பொதுமக்களுக்காக சேவையாற்றவே இந்த புனிதமான பணியினை செய்துவருகின்றோம்.

கிராமப்புறங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன இது தொடர்பில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக பொற்றோர் அதிகம் விழிப்பாக இருக்க வேண்டும், நாம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி பணியாற்றுகின்றோம்.

பொலிஸார் என்பவர்களும் மனிதர்கள் தான், பொலிஸாருடன் கதைப்பதற்கு யாரும் பயம்கொள்ளத் தேவையில்லை, நாங்கள் உங்களுக்கு சேவையாற்றவே இருக்கின்றோம்;. உங்கள் பிரச்சனைகளை தயக்கமின்றி எந்த வேளையிலும் எங்களிடம் கூறலாம். இங்கு படித்துவிட்டு தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் விரும்பினால் பொலிஸ் உத்தியோகத்திற்கு விண்ணப்பிக்கலாம், இதற்கான விண்ணப்பங்களை உங்கள் பிரதேச பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒருவர் வீட்டில் வேலையற்று இருக்கும்போது தீய நடவடிக்கைகளிலும், தீய சிந்தனைகளிலும் ஈடுபட பெரும்பாலும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது. ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்யும்போது அவ்வாறு ஏற்பட வாய்ப்புக்கள் ஏற்படமாட்டாது. ஆகையால் வேலையற்று நாளைக் கழித்துக்கொண்டிருப்பவர்கள் வருமானம் பெறக்கூடிய ஒரு தொழிலை தேடிக்கொள்ள வேண்டும். எனத் தெரிவித்தார்.